நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் நீரில் மீனாக நீந்திக் கொண்டு இருந்தனர். அதில் இருந்து இரண்டு வகைகள் தோன்றின.

முதல் வகை நமது சாப்பாட்டுத் தட்டிலும் மீன் தொட்டியிலும் காணப் படும் கதிர் துடுப்பு மீன்கள்.

இரண்டாவது வகை கதுப்புத் துடுப்புகளுடன் நீர் நிலைகளின் அடிப்பகுதியில் கற்களுக்கு அடியில் மறைந்து வாழ்ந்த நண்டுகள் சிப்பிகளைப் பிடித்து உண்டு வாழ்ந்த கதுப்புத் துடுப்பு மீனினம்.

இந்தக் கதுப்புத் துடுப்பு மீனினத்திலும் பல இனங்கள் உருவாகின.

ஆனால் தற்பொழுது இந்த இனத்தில் மூன்று இனம் மட்டுமே உயிருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. 







முதல் இனம் சீலகாந்த் என்று அழைக்கப் படும் கதுப்புத் துடுப்பு மீன், இந்தியப் பெருங் கடலில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிழக்குப் பகுதியிலும் இந்தோனேசியக் கடல் பகுதியிலும் வாழ்கிறது.

இரண்டாவது இனம் நுரையீரல் மீன்.

நுரையீரல் மீன்களிலும் பல வகைகள் வாழ்ந்திருக்கின்றன.
ஆனால் தற்பொழுது நான்கு இனம் மட்டுமே வாழ்கிறது.

தற்பொழுது நுரையீரல் மீன்கள் தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள குளம் குட்டை போன்ற நன்னீர் நிலைகளில் வாழ்கின்றன.

தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில்காணப் படும் நுரையீரல் மீன்களில் இரண்டு நுரையீரல்கள் காணப் படுகிறது.ஆனால் ஆஸ் திரேலி யாவில் காணப் படும் நுரையீரல் மீனில் ஒரே ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.

முதலில் நுரையீரல் மீனினத்தில் இருந்துதான் தவளை இனமும் பின்னர் ஊர்வன இனமும் தோன்றியதாக நம்பப் பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் கதுப்புத் துடுப்பு மீனினத்தில் இருந்தே தவளை மற்றும் ஊர்வன இனவகைகளும் தோன்றி இருப்பது தெரியவந்துள்ளது.

நுரையீரல் மீனானது தற்காலிகமாக வறட்சியைத் தாங்கக் கூடிய தகவமைப்பைக் கொண்ட மீன் மட்டுமே.மற்ற படி நுரையீரல் மீனால் தரை வழியாக ஒரு நீர் நிலையில் இருந்து அடுத்த நீர் நிலைக்கு செல்ல உறுப்புகள் எதுவும் இல்லாத மீன்.கதுப்புத் துடுப்பு மீன்களுக்கே அந்தத் தகவமைப்பு இருந்தது.




நுரையீரல் மீனினமனது கோடை காலத்தில் குளம் குட்டைகள் வறண்டு விடும் பொழுது தரைக்கு அடியில் வளையைத் தோண்டி சுருண்டு கொண்டு பின்னர் தன்னைச் சுற்றி கோழைப் படலத்தை உருவாக்கிக் கொள்கிறது.பின்னர் நுரையீரல் மூலம் காற்றை சுவாசிக்கிறது.இந்த நிலையில் மற்ற செயல் பாடுகளைக் குறைத்துக் கொண்டு வெறுமனே காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு பல மாதங்கள் தாக்குப் பிடித்து அடுத்த மழைக் காலம் வரையிலும் உயிருடன் வாழ்கிறது.




ஆப்பிரிக்க வகை நுரையீரல் மீனானது ஒரு ஆண்டு வரை இதே போன்று உயிருடன் வாழ்கிறது.ஆனால் ஆஸ்திரேலியாவில் காணப் படும் நுரையீரல் மீனானது உயிருடன் இருக்க வேண்டும் என்றால் உடல் காயாமல் இருக்க வேண்டும்.உடல் காய்ந்து விட்டால் விரைவில் உயிரிழந்து விடுகிறது.

இவ்வாறு நுரையீரல் மீன்கள் பெருங் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தென் அமெரிக்கா ,ஆப்பிரிக்கா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்து பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் நுரையீரல் மீன்களின் புதை படிவங்கள் இந்த மூன்று கண்டங்களில் மட்டுமின்றி மற்ற வடபகுதிக் கண்டங்களிலும் காணப் படுவதால் வடபகுதிக் கண்டங்கள் வழியாகவே நுரையீரல் மீன்கள் தென் பகுதிக் கண்டங்களுக்கு பரவி இருக்கின்றன.முக்கியமாக தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் இரண்டு நுரையீரலை கொண்ட நுரை ஈரல் மீன்கள் காணப் படுவதுடன் ஆஸ்திரேலியா வில் காணப் படும் மீனில் ஒரே ஒரு நுரை ஈரல் மட்டுமே காணப் படுவதும் வடபகுதி இடப் பெயர்ச்சியையே உறுதிப் படுத்துகிறது.


மூன்றாவது இனம்தான் நன்னீரில் வாழந்த கதுப்புத் துடுப்பு மீன்கள்.(tetra pods)இதில் இருந்தே தவளைகள் மற்றும் ஊர்வன வகைகள் தோன்றின.இவ்வாறு நீரில் இருந்து நிலத்திற்கு விலங்கினங்கள் எப்படி வந்தது என்பதற்கு ஒரு விளக்கம் கூறப் பட்டது.

''வற்றிய குளம்'' என்று அழைக்கப் படும் ஒரு விளக்கம் கூறப் பட்டது.

அதாவது குளம் குட்டை போன்ற நீர் நிலைகள் கோடையில் வற்றும் பொழுது அதில் இருந்த கதுப்புத் துடுப்பு மீன்கள் தரைக்கு வந்து மற்ற நீர் நிலைகளைத் தேடி அலைந்ததில் காலப் போக்கில் மீனுக்கு கால்கள் உருவாகின என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில் 36.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகாந்தோஸ்டீகா என்று அழைக்கப் படும் ஆதி நான்கு காலியின் புதை படிவங்கள் கிரீன்லாந்து தீவில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டது.அந்தப் புதை படிவத்தை ஆய்வு செய்ததில் நிலத்திற்கு வருவதற்கு முன்பே மீனினத்திற்கு கால் போன்ற உறுப்புகள் தோன்றி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே வற்றிய குளம் விளக்கம் கேள்விக் குறியானது.

குறிப்பாக அகாந்தோஸ்டீகாவிற்கு துடுப்புக்குப் பதில் கால்கள் இருந்தாலும் முன்காலில் மணிக்கட்டு எலும்புகளும் பின் கால்களில் கணுக் கால் எலும்புகளும் இருந்திருக்க வில்லை.அதே போன்று அகாந்தோஸ்டீகாவின் விலா எலும்புகளும் சிறியதாகவும் வலுவில்லாமலும் இருந்தது.எனவே அந்த விலங்கால் நிலத்தில் அதன் உடம்பைத் தாங்கி இருக்க இயலாது.

அதே போன்று அகாந்தோஸ்டீகாவின் முதுகு எலும்புகளும் நீரில் நீந்தும் பொழுது ஏற்படும் அழுத்தத்தை தாங்குவதற்கு ஏற்றதாக இருந்ததே யொழிய நிலத்தில் நடப்பதற்கு பயன்படுவதாக இல்லை.அதே போன்று எலும்புகளுடன் இருந்த நீண்ட வால் நீந்துவதற்கு எதுவாக இருந்தது. ஆனால் அகாந்தோஸ்டீகாவிற்கு துடுப்புக்குப் பதில் கால்கள் இருந்தது.எனவே அகாந்தோஸ்டீகாவானது நீரை விட்டு வெளியேறி வாழ்ந்திருக்க இயலாது என்பது தெரியவந்தது.

மேலும் அகான்தோஸ்டீகாவின் மூக்குத் துவாரங்கள் மீனைப் போன்று இருந்தது.அதாவது மற்ற சுவாசிக்கும் விலங்குகளுக்கு இருப்பதைப் போன்று மூக்குத் துவாரங்கள் தொண்டைப் பகுதியில் இணைந்து இருக்கவில்லை.

எனவே அகாந்தோஸ்ஸ்டீகாவின் மூக்குத் துவாரங்களானது மீனைப் போன்றே வாசனை அறிய மட்டுமே பயன்பட்டிருக்கும்.மற்ற படி வெய்யில காலத்தில் குளத்தில் நீர் வெப்பமடைந்து நீரில் பிராண வாயுவின் அளவு குறையும் பொழுது அகாந்தோஸ்டீகாவானது கெளுத்தி என்று அழைக்கப் படும் பூனை மீனைப் போன்று நீர் மட்டத்திற்கு மேலே தலையை நீட்டி காற்றை வாயினால் விழுங்கி சுவாசித்து இருக்கும்.

அப்படியென்றால் முதல் நில வாழ் விலங்கு எப்படி சுவாசித்தது?இதற்கு விடை கூறும் வகையில் ஒரு புதை படிவம் 2004 ஆம் ஆண்டு சீனாவில் கண்டு பிடிக்கப் பட்டது.



அகாந்தோ ஸ்டீகாவைப் போன்ற உருவ அமைப்பில் சீனாவில் முப்பத்தி ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீரிலும் நிலத்திலும் வாழ்ந்த கென்னிஇக்திஸ் என்ற கதுப்புத் துடுப்பு மீனின் புதை படிவத்தில் மூக்குத் துவாரங்களானது மற்ற சுவாசிக்கும் விலங்குகளுக்கு இருப்பதைப் போன்றே வாய்க்குள் இருந்தது.எனவே கென்னி இக்திஸ் என்ற கதுப்புத் துடுப்பு மீனானது அகாந்தோஸ்டீகாவைப் போன்று வாயைத் திறக்காமலே காற்றை சுவாசித்து இருக்க முடியும்.

கென்னி இக்திசானது அகாந்தோஸ்டீகாவைப் போன்ற நான்கு காலி அல்ல.ஆனாலும் நான்கு காலிகளின் முன்னோடியான ''டெட்ரா போடா மார்பா ''என்று அழைக்கப் படும் கதுப்புது துடுப்பு மீனினத்தைச் சேர்ந்தது.
(இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக '' நன்னீர் வாழ் விலங்கினங்கள் எவ்வாறு மற்ற கண்டங்களுக்குப் பரவின?'' கட்டுரை உள்ளது.)











Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.