காணாமல் போன டைனோசார் தீவு விஞ்ஞானி.க.பொன்முடி.

சாரோ போட் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசார்கள் பத்து ஆப்பிரிக்க யானைகளின் அளவுடன் ஒரு லட்சம் கிலோ எடையுடனும் இருந்திருப்பது உலகெங்கும் கிடைத்த எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் ஐரோப்பாக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ருமானியா நாட்டில் உள்ள ட்ரான்சில்வேனியா என்ற இடத்தில் கிடைத்த சாரோ போட் வகை டைனோசார்களின் எலும்புகள் அசாதாரணமாக ஒரு குதிரையின் அளவுடனும் நூற்றி மூன்று கிலோ எடையுடனும் மிகவும் சிறியதாக இருந்தன.

அதே போன்று ஹெட்ரோ சாராஸ் என்று அழைக்கப் படும் வாத்து மூக்கு டைனோசர்கள் முப்பத்தி மூன்று அடி நீளம் வரை வளரக் கூடியவைகள் ஆனால் ட்ரான்சில்வேனியா பகுதியில் கிடைத்த ஹெட்ரோ சாராஸ் வகை டைனோசார்களின் எலும்புகள் வெறும் பதின் மூன்று அடி நீளமே இருந்தன.

மேலும் இகுவானா டோன்ட் என்ற வகை டைனோசர்கள் முப்பது அடி நீளம் வரை வளரக் கூடியவைகள் ஆனால் ட்ரான்சில்வேனியாவில் கிடைத்த இரண்டு வகை இகுவானா டோன்ட் டைனோசார்களின் எலும்புகள் பத்து அடி நீளமே இருந்தன.
இவ்வாறு மற்ற இடங்களில் கிடைத்த டைனோசார்களின் எலும்புகளின் அளவைக் காட்டிலும் ட்ரான்சில்வேனியா பகுதியில் கிடைத்த டைனோசார்களின் எலும்புகள் பாதி அளவுடன் இருப்பது ஏன் ? என்ற கேள்வி எழுந்தது.

குறிப்பாக ட்ரான்சில்வேனியா பகுதியில் 1895 ஆம் ஆண்டில் ஒரு பண்ணை நிலத்தில் இருந்து டைனோசர்களின் எலும்புகளை லோனா என்ற பெண் தற்செயலாகக் கண்டு பிடித்து தன அண்ணனிடம் காட்டினாள்.அதிர்ஷ்டவசமாக லோனவின் அண்ணன் பாரன் பிரான்ஸ் நோப்ஸ்கா ஒரு தொல்விலங்கியல் ஆராய்ச்சியாளர்.

அதே கால கட்டத்தில் மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ் சிசிலி,ஆகிய தீவுகளில் இருந்தும் குள்ள வகை யானைகளின் எலும்புகளையும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புகளையும் ஆராச்சியாளர்கள் எடுத்தார்கள்.

இவ்வாறு தீவுகளில் வாழ்ந்த விலங்குகள் குள்ளமாக இருப்பதற்கு தீவை விட்டு வெளியேற இயலாத நிலையில் தீவில் குறைந்த அளவே உணவுத் தாவரங்கள் கிடைத்ததால் உயிர் பிழைத்து இருப்பதற்காக பெரிய வகை விலங்கினங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற படி காலப் போக்கில் குள்ள வகை விலங்கினமாக உருவாகி விட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினார்கள்.

ஆனால் ட்ரான்சில்வேனியாவோ ஐரோப்பாவின் மதியப் பகுதியில் அமைந்து இருக்கும் நிலப் பகுதி.ஆனாலும் நோப்ஸ்கா பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ட்ரான்சில்வேனியா பகுதி தற்பொழுது இருப்பதைப் போன்று மலைகளால் சூழப் பட்டு இருக்காமல்; கடலால் சூழப் பட்ட ஒரு தீவாக இருந்ததே அப்பகுதியில் குள்ள வகை டைனோசர்களின் எலும்புகள் காணப் படுவதற்கு காரணம்.என்று கூறினார்.மேலும் தன தங்கை ஒரு தனி வகை டைனோசரின் எலும்புகளைக் கண்டு பிடித்திருக்கிறாள் என்றும் அந்த டைனோசருக்கு மாக்யா சாராஸ் என்றும் பெயர் சூட்டினார்.

ஆனால் மற்ற ஆராய்ச்சியாளர்கள், ட்ரான்சில்வேனியா பகுதியில் கிடைத்த டைனோசார்களின் எலும்புகள் இள வயது டைனோசார்களின் எலும்புகள் என்று கூறி நோப்ஸ்காவை கேலி செய்தனர் .

ஆனால் ஐரோப்பாக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் கிடைத்த நான்கு வகை டைனோசர்களின் எலும்புகளும் அளவில் சிறியதாக இருந்தது நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் புதிராக இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல் விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் ட்ரான்சில்வேனியாப் பகுதியில் கிடைத்த டைனோசர்களின் எலும்புகளை குறுக்காக வெட்டி அதன் உள் அமைப்பை மற்ற இடங்களில் கிடைத்த அதே இனத்தைச் சேர்ந்த பெரிய வகை டைனோசர்களின் எலும்புகளின் உள் அமைப்புடன் சக்தி வாய்ந்த நுண்ணோக்கியின் உதவியுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

குறிப்பாக நன்கு வளர்ந்த டைனோசர்களின் எலும்புகளில் மரங்களை குறுக்காக வெட்டினால் தெரியும் வளையங்களைப் போன்றே நுண்ணிய வளையங்கள் உருவாகி இருக்கும்.மரங்களில் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் தெரியும் வளையங்கள் ஆண்டு வளையங்கள் என்று அழைக்கப் படுகின்றன.

அந்த வளையங்களின் அடிப்படையில் மரங்களின் வயது கணக்கிடப் படுகின்றன.அதே போன்று டைனோசர்கள் வளரும் பொழுதும் அவற்றின் எலும்புகளில் இரத்தம் பாய்வதற்காக எலும்புகளில் சிறிய நுண்னறைகள் உருவாகின்றன.நன்கு வளர்ந்த விலங்கின் எலும்பில் இந்த நுண்ணறைகள் அதிக அளவில் காணப் படும்.

இந்த முறையில் ட்ரான்சில்வேனியாப் பகுதியில் கிடைத்த டைனோசர்களின் எலும்புகளில் அதிக அளவில் நுண்னறைகள் இருப்பதன் அடிப்படையில் அந்த டைனோசர்கள் 90 முதல் 95 சதவீதம் வரை வளர்ந்த டைனோசர்கள் என்றும் நோப்ஸ்கா கூறியது சரியே என்றும் அறிவித்து இருகின்றனர்.

மற்ற ஆராய்ச்சியாளர்கள் கூறியது போன்று ட்ரான்சில்வேனியாப் பகுதியில் கிடைத்த டைனோசர்களின் எலும்புகள் சிறிய வயது டைனோசர்கள் அல்ல என்றும் ஜெர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருகின்றனர்.இந்தப் புதிய கண்டு பிடிப்பு மூலம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் மத்தியப் பகுதியில் கடலால் சூழப் பட்ட ஒரு தீவு இருந்திருப்பது நிரூபணமாகிறது.

மேலும் ஐரோப்பாக் கண்டத்தில் பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதால் ட்ரான்சில்வேனியாப் பகுதி கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்ததைப் போலவே ட்ரான்சில்வேனியாவைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்ததால்தான் இன்று நாம் காணும் ஐரோப்பாக் கண்டம் உருவாகியிருக்கிறது.இவ்வாறு நிலப் பகுதிகள் ஆங்காங்கே அவ்வபொழுது மேல் நோக்கி உயரும் பொழுது நிலத்திற்கு கீழே இருக்கும் பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.