இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது? பகுதி 4
ராட்சத ஆமைகள்
தற்பொழுது உலகில் ராட்சத ஆமைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டத்திலும்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் செஷல்ஸ் தீவிலும் காணப் படுகின்றன.
காலபாகஸ் தீவு மற்றும் செஷல்ஸ் தீவில் காணப் படும் ஆமைகள் முன்னூறு கிலோ எடையுள்ள விலங்குகள்.இந்த இரண்டு ஆமைகளும் டெஸ்ட்யூடின்ஸ் என்ற ஆமைக் குடும்பத்தைச் சேர்ந்தது.இந்தக் குடும்பத்தில் இருபத்தி இரண்டு இனவகைகள் அறியப் பட்டுள்ளது.
காலபாகஸ் தீவில் காணப் படும் ராட்சத ஆமைகள் கெலோனாய்டிஸ் என்ற இனத்தைச் சேர்ந்தது.
முதன் முதலில் காலபாகஸ் தீவில் இந்த அமைகளைக் கண்ட விஞ்ஞானி சார்லஸ் டார்வின் எப்படி இந்த விலங்குகள் இந்தத் தீவுக்கு வந்திருக்கும் ? என்று வியந்தார். காலபாகஸ் தீவு ஆமையின் மூததையானது தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கெலோனாய்டிஸ் சிலின்சிஸ் என்ற சிறிய அளவு ஆமை என்று, மரபணு ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர்.
காலபாகஸ் தீவில் காணப் படும் ராட்சத ஆமைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி தற்செயலாகக் காலபாகஸ் தீவில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இந்த முறையில் இனப் பெருக்கம் செய்யும் அளவுக்கு ஒரு ஜோடி ஆமைகள் அல்லது ஒரே ஒரு கருவுற்ற பெண் ஆமையாவது தென்அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ராட்சத ஆமைகளின் உடலில் நிறைய கொழுப்பு இருப்பதால் பல மாதங்கள் கடலில் உணவும் நீரும் இன்றி ராட்சத ஆமைகள் பிழைத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுக்கு வந்த சிறிய அளவுள்ள ஆமைகள் பின்னர் பெரிய ஆமையாக மாறியதா ?அல்லது ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுக்கு பெரிய அளவுள்ள ஆமைகள் வந்ததா ? என்பது உறுதி செய்யப் படவில்லை.
மரபணு ஆய்வில் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெலோனாய்டிஸ் ஆமைகள் முதன் முதலில் எஸ்பானலோ தீவிலும் செயின்ட் கிறிஸ்டோபல் தீவிலும் குடியேறிய பிறகு, மற்ற தீவுகளுக்கு குடியேறி இருப்பது தெரிய வந்துள்ளது.ஆமைகளின் கடல் பயணத்துக்கு கடல் நீரோட்டங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
மரபணு ஆய்வில் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் கெலோனாய்டிஸ் ஆமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஹிங்கிபேக் ஆமையின் நெருங்கிய சொந்தமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் கெலோனாய்டிஸ் ஆமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி, அட்லாண்டிக் பெருங் கடலில் பல மாதங்கள் தத்தளித்த படி மிதந்து சென்று, தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
குறிப்பாக காலபாகஸ் தீவுக் கூட்டமானது காலபாகஸ் பீட பூமி என்று அழைக்கப் படும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகள் ஆகும்.
அத்துடன் தென் அமெரிக்கக் கண்டத்தையும் காலபாகஸ் தீவுக் கூட்டத்தையும் இணைக்கும் வண்ணம் கடலுக்கு அடியில் இரண்டு கடலடி மேடுகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
காலபாகஸ் தீவில் நீந்தவோ மிதக்கவோ இயலாத ராட்சத ஆமைகள் காணப் படுவதன் மூலம் ,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, தென் அமெரிக்கக் கண்டதுக்கும் காலபாகஸ் தீவுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்திருப்பதும் அதன் வழியாக ராட்சத ஆமைகள் இடம் பெயர்ந்து இருப்பதையும் புலப் படுத்துகிறது.
இதே போன்று காலபாகஸ் தீவில் நேசோரைசோமிஸ் டார்வினி என்று பெயர் சூட்டப் பட்ட காலபாகஸ் தீவு எலிகளும் வாழ்ந்திருக்கின்றன.தற்பொழுது அந்த எலி இனம் அழிந்து விட்டது. நான்கே நான்கு மாதிரிகள் மட்டும் உள்ளன.
ராட்சத ஆமைகளைப் போல் அல்லாது சிறிய அளவுள்ள எலியின் உடலில் கொழுப்பும் நீரும் குறைவாக இருப்பதால் எலிகளால் பல நாட்கள் கடலில் உமாவும் நீரும் இன்றி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து இருக்க இயலாது.
எனவே காலபாகஸ் தீவில் வாழ்ந்த எலியின் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக தென் அமெரிக்கக் கண்டதுக்கும் காலபாகஸ் தீவுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்திருப்பது உறுதியாகிறது.
இதே போன்று காலபாகஸ் தீவில் காணப் படும் இகுவானா என்று அழைக்கப் படும் ஊர்வன வகை விலங்கினங்கள் காணப் படுகிறது.இந்த விலங்குகளின் மூததையானது தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் பச்சை நிற இகுவானக்கள் ஆகும்.
இந்த விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக வைத்து இருக்க இயலாது.தாவரங்களை உண்ணும் இந்த விலங்குகளின் உணவு செரிப்பதற்கே சூரியனின் வெப்பம் தேவை.இல்லையென்றால் இந்த விலங்குகள் குளிரில் விரைத்து இறந்து விடும்.
எனவே காலபாகஸ் தீவில் காணப் படும் இகுவானாக்கள் மூலமாகவும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும் காலாபகஸ் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பது உறுதியாகிறது.
இதே போன்று இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் , கொமரோஸ், செஷல்ஸ்,மாகி,பிரஸ்லின்,உள்பட மாஸ்கரீன் தீவுகள் என்று அழைக்கப் படும் மொரீசியஸ்,ரோட்ரிகஸ்,மற்றும் ரீ யூனியன் ஆகிய தீவுகளிலும் ராட்சத ஆமைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த தீவுகளில் டெஸ்ட்யூடின்ஸ் என்ற ஆமைக் குடும்பத்தைச் சேர்ந்த சிலிண்ட்ராப்சிஸ் மற்றும் டிப்சோகெலிஸ் என இரண்டு இனத்தைச் சேர்ந்த ராட்சத ஆமைகளின் வாழிடமாக இருந்திருக்கிறது.
இதில் சிலிண்ட்ராப்சிஸ் இனம் முற்றிலும் அழிந்து விட்டது.தற்பொழுது டிப்சோகெலிஸ் என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த ராட்சத ஆமைகள் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரத்திற்கும் அதிக எண்ணிக்கையில் செஷல்ஸ் தீவில் காணப் படுகிறது.
சிலிண்ட்ராப்சிஸ் இனத்தைச் சேர்ந்த ராட்சத ஆமைகளின் புதை படிவங்கள் மடகாஸ்கர் தீவு மற்றும் மாஸ்கரிணி தீவுகள் என்று அழைக்கப் படும் மொரீசியஸ் ரோட்ரிக்ஸ் மற்றும் ரீ யூனியன் ஆகிய தீவுகளில் வாழ்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மரபணு ஆய்வில் சிலிண்ட்ராப்சிஸ் இனத்தைச் சேர்ந்த ராட்சத ஆமைகள் மடகாஸ்கர் தீவில் இருந்து மற்ற தீவுகளுக்கு இடம் பெயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தத் தீவுகள் ஒவொன்று ஐநூறு முதல் அறுநூறு கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன.
இந்தத் தீவுகளுக்கும் ராட்சத ஆமைகள் கடலில் மிதந்து சென்ற மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்த படி தற்செயலாகக் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் செஷல்ஸ் தீவில் செஷல்ஸ் தீவில் சூக்லோசஸ் கார்டினரி என்று அழைக்கப் படும் தவளைகள் காணப் படுகின்றன.தவளைகளால் கடல் நீரில் உயிர் வாழ இயலாது.
தவளைகள் தோலின் மூலம் சுவாசிக்கும் பிராணிகள் எனவே தவளைகள் சுவாசிக்க அதன் தோல் ஈரப் பசையுடன் இருக்க வேண்டியது அவசியம். பல நாட்கள் தவளைகள் கடலில் தாவரங்களின் மேல் மிதந்து சென்றால் அதன் தோல் உலர்ந்து விடும்.எனவே தவளைகளால் சுவாசிக்க இயலாமல் இறக்க நேரிடும்.
இதே போன்று செஷல்ஸ் தீவில் தவளைகளைப் போலவே ஈரப் பதமான சூழலில் வாழக் கூடிய கடல் நீரில் உயிர் வாழ இயலாத சீலியன் என்று அழைக்கப் படும் பார்வைத் திறனற்ற கிராண்டி சோனியா செசலென்சிஸ் என்ற உயிரினம் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக மாஸ்கரிணி தீவுககளும் காலபாகஸ் தீவுக் கூட்டத்தைப் போலவே மாஸ்கரினி பீட பூமி என்று அழைக்கப் படும் ஒரு கடலடி பீடப் பூமியின் மேல் அமைந்து இருக்கும் தீவுகள் ஆகும்.
எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் பல நூறு கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கும் மாஸ்கரினி தீவுகளில் காணப் படுவதன் மூலம், கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதைப் புலப் படுத்துவதுடன், அதன் காரணமாகத் தற்பொழுது கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி பீட பூமிகள், கடல் மட்டத்திற்கு மேலாக இருந்து விலங்கினங்களின் இடப் பெயர்ச்சிக்கு சாதகமாக இருந்திருப்பதையும் உறுதிப் படுத்துகிறது.
தரையில் வாழும் நத்தைகள் தீவுகளுக்குச் சென்றது எப்படி?
ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது.
இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார்.
அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது.
ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது.
இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது.
பொதுவாக தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார்.
அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார்.
டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்.
ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்.
ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும்.
தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன.
ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும்.
எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும்.
எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது.
Comments