இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது? பகுதி 3
பேபாப் மரங்கள்
மடகாஸ்கர் தீவில் மழை நீரைச் சேகரிக்கும் பாட்டில் வடிவ மரங்கள் காணப் படுகின்றன.பேபாப் மரங்கள் என்று பொதுவாக அழைக்கப் படும் இந்த மரத்தின் அறிவியல் பெயர் அடன்சோனியா.
இந்த மரத்தின் உயரத்தை விட மரத்தண்டின் சுற்றளவு அதிகமாக இருப்பததுடன் கிளைகள் மரத்தின் உச்சிப் பகுதியில் மட்டும் இருப்பதால், இந்த மரம் பார்ப்பதற்கு ஒரு பாட்டில் வடிவத்தில் இருக்கிறது.
பெரும்பாலும் வறண்ட சூழ் நிலையில் வளரக் கூடிய இந்த மரத்தில் கிளைகளில் உள்ள பிளவுகள் மூலம் மழை நீர் சேகரிக்கப் படுகிறது. இவ்வாறு ஒரு போபாப் மரத்தில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் வரை சேமித்து வைக்கப் படுகிறது.
வறண்ட காலத்தில் இந்த நீரை மனிதர்களும் விலங்கினங்களும் பயன் படுத்தி உயிர் வாழ பயன் படுவதால் இந்த மரம் உயிர் மரம் என்றும் அழைக்கப் படுகிறது.
இந்த இனமரங்கள் விதை மூலம் பரவுகின்றன. இந்த மரத்தின் விதைகள் தேங்காய் போன்ற நார்ப்போருளால் ஆன ஒரு பழத்திற்குள் இருக்கிறது.
இந்தப் பழத்தைக் குரங்குகள் விரும்பி உண்பதால் இந்தப் பழம் குரங்குப் பழம் என்றும் அழைக்கப் படுகிறது.இந்தப் பழத்தைத் தின்ற குரங்குகள் வவ்வால்கள் மற்றும் ஆமைகளின் கழிவுகளில் இருக்கும் விதைகள் பல ஆண்டுகள் கழித்தும் முளைக்கக் கூடியதாக இருக்கிறது.
எனவே இந்த மரத்தின் பரவலுக்கு விலங்கினங்கள் முக்கிய காரணமாக இருக்கிறது.
பேபாப் என்று அழைக்கப் படும் அடன்சோனி மரத்தில் எட்டு இனவகைகள் உள்ளன.இதில் ஆறு இனவகைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுகிறது.அட்டன் சோனியா டிஜிடேட்டா என்று அழைக்கப் படும் இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் அரேபியா பீட பூமிப் பகுதியிலும் காணப் படுகிறது.
இந்த நிலையில் அடன் சோனியா கிரிகரி என்று அழைக்கப் படும் எட்டாவது இனம் மடகாஸ்கர் தீவில் இருந்து எழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் காணப் படுகிறது.
ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் பேபாப் மரத்தின் பழத்தின் ஓடு மிகவும் மெலிதாக இருப்பதால் விரைவில் நீரில் ஊறி விடக் கூடியதாக இருப்பதால் மடகாஸ்கர் அல்லது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்த படி ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்த பிறகு மரமாக முளைத்து இருக்கலாம் என்ற கருத்தை நிபுணர்களால் நிராகரித்து விட்டனர்.
மாறாக ஆஸ்திரேலியாக் கண்டத்த்தின் பூர்வீகப் பழங்குடிகளால் அடன் சோனியா கிரிகரி மரத்தின் விதைகள் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு கொண்டு செல்லப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் அபோரிஜின்ஸ் என்று அழைக்கப் படும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வீகப் பழங்குடிகள் அந்தக் கண்டத்துக்கு எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் சென்று இருப்பது தொல்லியல் ஆய்வாளர்களால் கணிக்கப் பட்டுள்ளது.
ஆனால் மரபணு ஆய்வில் ஆஸ்திரேலியாக் கண்டத்திள் காணப் படும் அடன் சோனியா கிரிகரி மரங்கள், மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பேபாப் இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆணடுகளுக்கு முன்பே பிரிந்திருப்பது தெரிய வந்தள்ளது.
எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பேபாப் மரங்கள் எப்படி ஏழாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்தது? என்ற கேள்வி விடை கூறப் படாத கேள்வியாகவே இருக்கிறது.
எழாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் பறவைகளால் கழிவை வெளியேற்றாமல் கடக்கவும் இயலாது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பேபாப் மரங்களின் இடப் பெயர்ச்சி கடல் வழியாக சென்று இருந்தால் கூட ஆஸ்திரேலியாக் கண்டத்தின் மேற்குப் பகுதியிலேயே பேபாப் மரங்கள் காணப் பட வேண்டும்.
ஆனால் விநோதமாக பேபாப் மரங்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் வட மேற்குப் பகுதியில் அதாவது பசிபிக் கடல் பகுதியில் இருகிறது.
எனவே போபாப் மரத்தின் பரவல் கடல் வழியாக நடை பெற்று இருக்க வில்லை என்பதும் உறுதியாகிறதுஅத்துடன் போபாப் மரத்தின் பரவல் ஆசியக் கண்டம் வழியாக நடை பெற்று இருப்பதையே புலப் படுத்துகிறது.
ஆனால் ஆசியக் கண்டத்தில் போபாப் பரத்தின் இனவகைகளோ அல்லது புதை படிவங்களோ காணப் படவில்லை.
இவ்வாறு தொடர்ச்சியற்ற இனப் பரவல் மூலம் இடைப் பட்ட நிலப் பகுதிகள் கடல் மட்ட உயர்வையும் மூழ்கிய நிலத்தையும் புலப் படுத்துகிறது.
உதாரணமாக இந்தோனேசியக் கடல் பகுதியில் சாகுல் என்று அழைக்கப் படும் கடலடி நிலம் காணப் படுகிறது.இதே போன்று கற்கால மனிதர்களும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதன் மூலமாகவும் ஆசியக் கண்டதுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டதுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதையே புலப் படுத்துகிறது.
ஏனென்றால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வீகப் பழங்குடிகள் கடல் பயணம் செய்ததற்கு ஆதாரங்கள் எதுவும் அறியப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
குருட்டு மீன்கள்
இதே போன்று மடகாஸ்கர் தீவு மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் உள்ள குகைகளில் காணப் படும் குருட்டு மீன்கள் ஒரே பொது மூததையில் இருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருப்பதும் லூசியான பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் பிரசன்னா சக்கரவர்த்தி குழுவினர் மேற்கொண்ட மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப் படையில் அவர் எழாயிரம் கிலோ மீட்டர் அந்தக் குருட்டு மீன்கள் கடல் வழியாக இந்த இரண்டு நிலப் பகுதிகளுக்கும் பரவி இருக்க முடியாது என்றும் நிலத் தொடர்பு வழியாகவே குருட்டு மீன்களின் இடப் பெயர்ச்சி நடை பெற்று இருக்க வேண்டும் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
மடகாஸ்கர் தீவுக் குகைகளிலும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் குகைகளிலும் காணப் படும் குருட்டு மீன்கள் பன்னெடுங் காலமாக சூரிய ஒளி புகாத இருட்டான குகைச் சூழலில் வாழ்ந்ததால் காலப் போக்கில் பார்க்கும் தன்மையை இழந்து விட்டு இருக்கிறது.
இந்த இரண்டு பகுதிகளிலும் காணாப் பட்ட குருட்டு மீன்கள் கோபி மீனினத்தைச் சேர்ந்தது என்பதுடன் சீக்கோ கோபியஸ் என்று அழைக்கப் படும் குருட்டு கோபி மீனினம் பிலிப் பைன்ஸ் தீவுக் குகைகளிலும்,ஆக்சி லியோட்ரிஸ் என்று அழைக்கப் படும் குருட்டு கோபி மீனினம் பாப்புவா நியூ கினியா தீவுக் குகைகளிலும் காணப் படுகிறது.
எனவே முன்னொரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் மடகாஸ்கர் தீவுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கும் இடையில் ஆசியக் கண்டத்தின் வழியாக நிலத் தொடர்பு இருந்திருப்பதற்கு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
கிரே பிஷ்
மேலை நாடுகளில் கிரே பிஷ்கள் சுவையான உணவாக பரிமாறப் படுகிறது.பல மில்லியன் டாலர் வியாபாரம் கிரே பிஷ்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
கிரே பிஷ்கள் என்பது உண்மையில் கடலில் காணப் படும் லாப்ஸ்டர்களே.
கடலில் வாழ்ந்த நண்டுகள் ஆறு குளம் ஏரி போன்ற நன்னீர் நிலைகளில் வாழ்வதற்கு ஏற்றபடி தகவமைப்புகளைப் பெற்று நன்னீர் உயிரினங்களாக மாறியது.
அதைப் போன்றே கடலில் வாழ்ந்த லாப்ஸ்டர்களும் நன்னீர் நிலைகளில் குடியேறி நன்னீர் உயிரினங்களாக மாறியது.நன்னீரில் வாழும் லாப்ஸ்டர்கள் கிரே பிஷ் என்று அழைக்கப் படுகின்றன.நன்னீர் நண்டுகளைப் போலவே கிரே பிஷ் களாலும் கடல் நீரில் உயிர் வாழ இயலாது.
கடல் நண்டுகள் மற்றும் லாப்ஸ்டர்கள் கடலில் வசிப்பதால் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றன.
ஆனால் கிரே பிஷ்கள் கண்டங்களிலும் கண்டங்களை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில் மட்டுமே காணப் படுகின்றன.இதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கிரே பிஷ்கள் இடம் பெயர்ந்து இருப்பது புலனாகிறது.
இன்று கிரே பிஷ்கள் ஆப்பிரிக்கா மற்றும் பனிக் கண்டமான அண்டார்க்டிக்கா தவிர மற்ற ஐந்து கண்டங்களிலும் உள்ள நன்னீர் நிலைகளில் காணப் படுகின்றன.அத்துடன் ஆபிரிக்கக் கண்டத்திற்கு அருகில் உள்ள மடகாஸ்கர் தீவு,ஆஸ்திரேலியா கண்டத்துக்கு அருகில் அமைந்து இருக்கும் டாஸ்மேனியா , நியூ கினியா, நியூ சிலாந்து போன்ற தீவுகளிலும் காணப் படுகிறது.
கிரே பிஷ்களின் உறுப்புகளில் அமைப்புப் படி கிரே பிஷ்கள் அஷ்டாகாய்டியே மற்றும் பாரா அஷ்டாகாய்டியே இரண்டு பெரும் குடும்பங்களாகப் பிரிக்கப் படுகின்றன.அஷ்டாகாய்டியே குடும்ப உறுப்பினர்கள் வட கோளப்பகுதியிலும், பாரா அஷ்டாகாய்டியே குடும்ப உறுப்பினர்கள் தென் கோளப்பகுதியிலும் காணப் படுகின்றன.
கிரே பிஷ்களின் அடிவயிற்றுப் பகுதியில் ஐந்து ஜோடி நீந்தும் கால்கள் இருக்கும். ஆனால் தென் கோளப் பகுதிகளில் காணப் படும் பாரா அஷ்டாகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்களில் முன் இரண்டு நீந்தும் கால்கள் இருக்காது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் நண்பர் சர் தாமஸ் ஹக்ஸ்லி ,நன்னீரில் வாழக் கூடிய கிரே பிஷ்கள் எப்படி உலகம் முழுவதும் பரவியது? என்று வினா எழுப்பினார்.
அந்தக் கேள்விக்கு விடை காண இன்று வரை ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரிங்ஹாம் யங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் கைத் கிராண்டல் தலைமயிலான குழுவினர் மரபணு ஆய்வின் அடிப்படையில், எல்லா கிரே பிஷ்களும் ஒரே பொது மூதாதையில் இருந்தே பரிணாம மாற்றம் பெற்று இருக்கின்றன என்று அறிவித்து உள்ளனர்.
அத்துடன் கிரே பிஷ்களும் லாப்ஸ்டர்களும் சகோதர இனங்கள் என்றும் தெரிவித்து உள்ளனர்.
பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் படுகிறது.
அதன் அடிப்படையில் தென் கோளப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்காக் கண்டத்திலும், மடகாஸ்கர் தீவிலும்,ஆஸ் திரேலியாக் கண்டத்திலும்,ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் இருக்கும் நியூ சிலாந்து,நியூ கினியா போன்ற தீவுகளிலும், பாரா அஸ்டகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்கள் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் தென் பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து கோண்டு வாணா என்ற கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்ததே காரணம் என்று நம்பப் பட்டது.
கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனியாகப் பிரிந்ததாக நம்பப் படுகிறது.எனவே மடகாஸ்கர் தீவில் காணப் படும் கிரே பிஷ்கள் மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ்களுக்கு தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
இதே போன்று கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து நியூ சிலாந்து தீவானது எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து நகர்ந்ததாக நம்பப் படுவதால், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும் மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ்களுக்கு, ஓரளவு தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து முதலில் ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து நகர்ந்ததாக நம்பப் படுகிறது. ஆனால் விநோதமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் கிரே பிஷ்கள் காணப் படவில்லை.
இறுதியாக தென் அமெரிக்காக் கண்டமும் ஆஸ்திரேலியாக் கண்டமும் மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை அண்டார்க்டிக் கண்டம் வழியாக நிலத் தொடர்பு கொண்டு இருந்ததாக நம்பப் படுவதால், இந்த இரண்டு கண்டங்களிலும் காணப் படும் கிரே பிஷ்கள் நெருங்கிய சொந்தமாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால் பிரிங்ஹாம் யங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் மைக்கேல் ஜோனதன் கார்ல்சன் மற்றும் டாக்டர்,கைத் கிராண்டல் மேற்கொண்ட மரபணு ஆய்வில்,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிரே பிஷ்களும், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும் நெருங்கிய சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆய்வு முடிவானது கோண்டுவானாக் கண்டப் பிரிவுக் கருத்துக்கு முரணாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
உண்மையில் புவியியல் வல்லுனர்கள் நம்புவதைப் போன்று தென்கோள நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இருந்து பிரிந்து இருந்தால், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும், தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிரே பிஷ்களும், தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும்.
இதற்கு முற்றிலும் மாறாக, இந்த இரண்டு நிலப் பகுதிகளிலும் காணப் படும் கிரே பிஷ்கள், மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ் களை விட, நெருங்கிய சொந்தமாக இருப்பதன் அடிப்படையில் ,தென் கோளத்தின் நிலப் பகுதிகளில், பாரா அஸ்டகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்கள் காணப் படுவதற்கு, கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்ததே காரணம் என்று கூறப் படும் விளக்கம் சரியான விளக்கம் அல்ல என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
Comments