அது அப்போ ! இது இப்போ !
வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள அரிசோனா மாநிலத்தில் நூற்றி நாற்பது சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கல்மரங்கள் ஏராளமாகக் காணப் படுகின்றன.
இந்தக் கல் மரங்கள் இருநூற்றி இருபது கோடி ஆண்டுகள் தொன்மையானவைகள் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.இந்தக் கால கட்டதில்தான் டைனோசர்கள், ஆர்கோசாரஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஒரு விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து தோன்றியது.
இந்தக் கல் மரப் பாலைவனப் பகுதியில் டைனோசர்கள் உண்ட சைகேட் ஜிங்கோ உள்பட பலவகை மரங்களுடன் அடர்ந்த காடாக இருந்திருக்கிறது.அத்துடன் பைட்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஒரு விலங்கின் எலும்புப் புதை படிவங்களும் இன்னும் பல சதுப்பு நில ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்களும் காணப் படுகின்றன.
குறிப்பாக இந்தக் காலத்தில் வாழ்ந்த ஈட்டியோ சாராஸ் என்ற முதலை போன்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் வட அமெரிக்காவில் மட்டுமல்லாமல், தென் அமெரிக்க,இந்தியா,ஆப்பிரிக்கா,ஐரோப்பா ஆகிய கண்டங்களிலும் காணப் படுவதால் இந்தக் கால கட்டத்தில் எல்லாம் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும் பின்னர் அந்தப் பெருங்கண்டம் பிளவு பட்டுப் பிரிந்து தனித்தனியாகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இதன் அடிப்படையில் 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , வட அமெரிக்கக் கண்டமானது பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும், அதனால் அரிசோனா பகுதியில் வெப்ப மண்டலத்தில் காணப் படும் சதுப்பு நிலக் காடுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.பின்னர் அப்பகுதியில் ஏற்பட்ட எரிமலைச் செயல்பாட்டால் மரங்கள் அழிந்து கற்படிவங்களாக உருவாகிய பிறகு , வட அமெரிக்கக் கண்டமானது பாஞ்சியா கண்டத்தில் இருந்து பிரிந்து வடபகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
தற்பொழுது அரிசோனா மாநிலமானது பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ள மிதவெப்ப மண்டலப் பகுதியில் அமைந்து இருக்கிறது.எனவே மித வெப்ப மண்டலப் பகுதியில் பூமத்திய ரேகைப் பகுதியில் காணப் படும் சதுப்பு நிலக் காடுகள் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம், இந்தப் பகுதியானது பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்து பின்னர் வட பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.குறிப்பாக இருபத்தி இரண்டு கோடி ஆணடுகளுக்கு முன்பு அரிசோனா பகுதியானது தற்பொழுது இருக்கும் பகுதியில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கில் இருந்ததாக அதாவது வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள மத்திய அமெரிக்கா இருக்கும் பகுதியில் இருந்ததாக நம்பப் படுகிறது.
ஆனால் இது போன்ற விளக்கங்கள் ,தற்பொழுது துருவப் பகுதியில் காணப் படும் வெப்ப மண்டத் தாவரம் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களுக்கு விளக்கம் தரப் பொருத்தமற்றதாக இருக்கிறது.
குறிப்பாக பிளேட் டெக்டானிக் தியரி விளக்கத்தின் படி, வட துருவப் பகுதிகள் கடந்த பதிமூன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆர்க்டிக் வளையப் பகுதியில் இருந்திருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் வடதுருவப் பகுதியில் வெப்ப மண்டலப் பகுதியில் காணப் படும், ஊர்வன வகை ஆமைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் அடிப்படையில், ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியிலேயே வெப்ப மண்டலக் கால நிலை நிலவி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.அத்துடன் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் ஆர்க்டிக் கடலின் மட்டம் தாழ்வாக இருந்ததாகவும், அதனால் ஆசியக் கண்டத்தில் இருந்து நன்னீர் வாழ் ஆமைகளானது ஆசியக் கண்டத்தில் இருந்து வடதுருவப் பகுதி வழியாக வட அமெரிக்காவுக்கு சென்று இருப்பதாகவும் டாக்டர் ஜான் டார்டுனே என்ற புவியியல் வல்லுநர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று ஆர்க்டிக் பகுதியில் உள்ள எல்லிஸ்மெர் மற்றும் ஆக்சல் ஹை பெர்க் தீவுகளில் ஐந்தரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப மண்டலப் பகுதியில் வாழக் கூடிய ,முதலை ஆமை ,மற்றும் கோரிபோடன் என்று அழைக்கப் படும் நீர்யானை போன்ற விலங்கின் புதை படிவங்களும் ,பிராண்டோ சார்ஸ் என்று அழைக்கப் படும் காண்டா மிருகம் போன்ற விலங்கின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அத்துடன் நாலரை கோடி ஆண்டுகள் தொன்மையான செம்மரங்களின் அடிப் பகுதியும் மண்ணில் புதையுண்ட நிலையில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் ,வழக்கம் போல் அந்த நிலப் பகுதிகள், தென் பகுதியில் இருந்து வட பகுதியை நோக்கி நகர்ந்து சென்றதே காரணம் என்று விளக்கம் கூறாமல்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு , வட பகுதியிலேயே வெப்ப மண்டலக் கால நிலை நிலவி இருப்பதாக ஒரு புதிய விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
Comments