பூமிக்கு நீர், நைட்ரஜன் மற்றும் அம்மோனியா எப்படி வந்தது?


Photo

தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

குறிப்பாக, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,பூமி செவ்வாய் போன்ற சிறிய அளவிலான பாறைக் கிரகங்கள், நீண்ட காலத்தில், உருவானதாக நம்பப் படுகிறது.


அத்துடன்,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின்,மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது.


Photo




அதன் பின்னர், இது போன்ற இலேசான வாயுக்களானது,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் திரண்டதால்,வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களானது, உருவானதாக நம்பப் படுகிறது.



பாறைக் கிரகங்களுக்கும் வாயுக் கோள கிரகங்களுக்கும் இடையில் இருக்கும் பகுதியானது,உறை நிலைப் பகுதி,(snow line ) என்று வரையறை செய்யப் படுகிறது.


ஏனென்றால், இந்தப் பகுதியில்தான், நீராவி போன்ற எளிதில் ஆவியாகும் வாயுக்களானது, வெப்பக் குறைபாட்டால் உறை நிலையை அடைகிறது.
அத்துடன், புளுட்டோவுக்கும் அப்பால், இருக்கும் பகுதியானது மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது உறையும் பகுதி என்று வரையறுக்கப் படுகிறது.



இந்தப் பகுதியில்தான், வால் நட்சத்திரங்கள் உருவாகுவதாக நம்பப் படுகிறது.


ஆனால் இந்தக் கருத்தானது, ஒரு தவாறான கருத்து, என்பது, கிரகங்களில் காணப் படும், எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள்,மற்றும் வேதிப் பொருட்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


உதாரணமாக ,செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் அஸ்டிராய்டுகள் என்று அழைக்கப் படும் விண்பாறைகள் ,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பது குறித்து, பல்வேறு விளக்கங்கள் கூறப் படுகின்றன.


சிலர்,அந்த விண்பாறைகளானது,உருவாகாமல் போன ஒரு கிரகத்தின் மிச்சங்களாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.அந்த கிரகம் உருவகாமல் போனதற்கு, வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம் என்றும் நம்பப் படுகிறது.


வேறு சிலர்,அந்த விண்பாறைகளானது, கிரகங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் உருவாகி இருக்கலாம் என்று நம்புகின்றனர்.


இந்த நிலையில்,அந்த விண்பாறைகளுக்கு இடையில், 950 கிலோ மீட்டர் விட்டத்துடன் ஒரு குறுங் கிரகமும் வலம் வந்து கொண்டு இருக்கிறது.


அந்த குறுங் கிரகத்துக்கு, செரெஸ் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.


பூமியில் இருந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,கடந்த 1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்,அந்தக் குறுங் கிரகத்தில்,நீராவி இருப்பது தெரிய வந்தது.


அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில்,சில சமயம் வளி மண்டலம் இருப்பது தெரிய வந்தது.சில சமயம் அந்த வளி மண்டலம் காணப் பட வில்லை.


அதன் அடிப்படையில்,அந்தக் குறுங் கிரகத்தில்,அவ்வப் பொழுது மட்டும் உருவாகி மறையும், தற்காலிக வளி மண்டலம் இருக்கலாம் என்று நம்பப் பட்டது.


குறிப்பாக, வால் நட்சத்திரங்களானது, சூரியனை நெருங்கும் பொழுது,அதில் இருக்கும் எளிதில் ஆவியாகும் பொருட்கள் ஆவியாகுவதால்,அந்த தலைப் பகுதியானது பெரிதாகும்.


பின்னர் அந்த வால் நட்சத்திரமானது,சூரியனை விட்டு விலகிச் செல்லும் பொழுது,பழைய நிலைக்குத் திரும்பி விடும்.

அதே போன்று,செரெஸ் குறுங் கிரகதிலும் நடக்கும் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில்,கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, மைக்கேலா வில்லாரியல்,அந்தக் குறுங் கோளில், வளி மண்டலம் உருவான காலங்கள் குறித்து ஆய்வு செய்தார்.


அப்பொழுது,அந்தக் குறுங் கோளில்,வளி மண்டலம் உருவான காலங்களுக்கும், அந்தக் குறுங் கோளானது, சூரியனுக்கு அருகில் இருந்த காலங்களுக்கும், தொடர்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.


அத்துடன்,அந்தக் குறுங் கோளில் ,வளி மண்டலம் உருவான காலங்களுக்கும்,சூரியனில் அதிக அளவு கதிர் வீச்சு ஏற்பட்ட காலங்களுக்கும், தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.


இதன் தொடர்ச்சியாக,செயற்கைக் கோள் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,சூரியனில் இருந்து செல்லும், அதிக மின்னூட்டம் பெற்ற துகள்களானது,அந்தக் குறுங் கோளின் மேற்பரப்பில் இருக்கும் பனிப் படலங்களின் மேல் படும் பொழுது,அந்தப் பனிப் படலங்களானது,ஆற்றலைப் பெற்று, நீராவியாக உருவாகுவதால்,அந்தக் குறுங் கிரகத்தில் தற்காலிக வளி மண்டலம் உருவாகுவது தெரிய வந்தது.


அதன் பின்னர்,அந்த நீராவியானது,விண் வெளியில் கலந்து விடுவதால்,அந்த வளி மண்டலமானது, ஓரிரு வாரங்களே நிலைத்து இருப்பதும்,தெரிய வந்திருப்பதாக, மைக்கேலா வில்லாரியல், விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.


இந்த நிலையில், செரெஸ் குறுங் கிரகத்தில்,இருந்த,ஒரு பெரிய வட்ட வடிவப் பள்ளத்தில், வெண்நிற படிவங்கள் இருப்பது தெரிய வந்தது.முதலில் அந்தப் படிவங்களானது, பனிப் படலங்கள் என்று கருதப் பட்டது.


இந்த நிலையில்,நாசா ஒரு செயற்கை கோளை,அந்தக் குறுங் கிரகத்துக்கே செலுத்தி,அகச் சிவப்புக் கதிர் நிறமாலைக் கருவி மற்றும் நிறமாலைக் கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டது.அந்த ஆய்வில்,அந்த வெண்ணிறப் படிவங்களானது, உப்புப் படிவங்கள் என்பது தெரிய வந்தது.


குறிப்பாக அந்தப் படிவங்கள் குறித்த நிற மாலையை ஆய்வு செய்த,ரோம் நாட்டின் விண் இயற்பியலாளார்,மரியா கிறிஸ்டினா சான்டிஸ்,அந்தப் படிவங்களானது,

பூமியில் சுடு நீர் ஊற்றுப் பகுதிகளில் காணப் படும், சோடியம் கார்பனேட் உப்புகள் என்று தெரிவித்தார்.


அதன் அடிப்படையில் அந்தக் குறுங் கிரகத்தின் அடியில், வெப்பமான சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார்.அத்துடன்,அம்மோனியம் கலந்த களி மண்ணும் இருப்பதாகத் தெரிவித்தார்.


குறிப்பாக, மீத்தேன் மற்றும் அம்மோனியம் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம்,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில்,குறிப்பாக நெப்டியூன் கிரகம் இருக்கும், அதிகக் குளிர்ச்சியான,பகுதிகளிலேயே இருக்க சாத்தியம் என்று தூசித் தட்டுக் கொள்கையின் படி நம்பப் படுகிறது.


எனவே,செரெஸ் குறுங் கிரகமானது,நெப்டியூன் கிரகம் இருக்கும் பகுதியில் உருவாகிய பின்னர்,கிரகங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களால், தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்று,அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மிகாயில் சாலோடோவ் மற்றும்,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ் ரஸ்ஸல் ஆகியோர் நம்புகின்றனர்.

Photo

அல்லது,செரெஸ் குறுங் கிரகமானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவான பிறகு,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் இருந்து, செரெஸ் குறுங் கிரகத்தின் மேல் மோதிய, வால் நட்சத்திரங்கள் மூலம்,செரெஸ் குறுங் கிரகத்திற்கு அம்மோனியா வந்திருக்கலாம் என்றும்,ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.


ஆனால், அந்த உப்புப் படிவங்களானது, அந்த உப்புப் படிவங்கள் இருக்கும் வட்ட வடிவப் பள்ளத்துடன் தொடர்பு உடையது என்றும்,வால்நட்சத்திர மோதலால் உருவானது என்றும்,அதே போன்று சுடு நீர் ஊற்று தொடர்பானது என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.


இந்த நிலையில்,கார்ஸ்ருக்கி தொழில் நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த,டாக்டர்,மைக்கேல் ஹாப்னேர்,பூமியின் வளி மண்டலத்தின் அகச் சிவப்பு நிறமாலையை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,ட்ரோபோஸ்பியர் அடுக்கில்,இருக்கும் காற்றில்,ட்ரில்லியனில் முப்பத்தி மூன்று பகுதி என்ற அளவில், அம்மோனியா வாயு இருப்பதைக் கண்டு பிடித்ததாக அறிவித்தார்.


தூசித் தட்டுக் கொள்கையின் அடிப்படையில், பூமியில் அம்மோனியா வாயு இருப்பதற்கு சாத்தியம் இல்லை.எனவே பூமிக்கு எப்படி அம்மோனியா வாயு வந்தது, என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம் வந்து விட்டது.


ஏனென்றால், பூமி உருவான காலத்தில் பூமியானது உருகிய பாறைக் குழம்புக் கோளமாக இருந்ததாக நம்பப் படுகிறது.

எனவே அந்த அதீத வெப்ப நிலையில்,அம்மோனியா, மீத்தேன் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம், ஆவியாகி, பூமியை விட்டு வெளியேறி விடும்.


எனவே , பூமிக்கு எப்படி அம்மோனியா வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

ஆனால்,சூரிய மண்டலத்தில் பூமி மட்டுமின்றி,செவ்வாய்,வியாழன்,சனி,யுரேனஸ்,நெப்டியூன்,மற்றும் புளூட்டோ என ஒன்பது கிரகங்களிலும்,அம்மோனியா காணப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அத்துடன் , பூமியின் வளி மண்டலத்தில், முக்கால் பாகம் நைட்ரஜன் வாயுவால் ஆனது,கால் பாகம் ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களால் ஆனது.


இந்த நிலையில்,நைட்ரஜன் வாயுவும், பூமிக்கு வால் நட்சத்திரங்கள் மூலம் வந்திருக்கலாம், என்று அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியரான சாண்ட்ரா பிசாரெல்லோ,விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.


நைட்ரஜன் மற்றும் கார்பன் போன்றவைகள் உயிர் மூலக் கூறுகள் என்பதால், பூமியில் உயிர் தோன்றக் காரணமாக இருந்திருக்கின்றன.


உயிர் தோன்றிய பிறகு,இறந்த உயிர்கள் மூலம்,பூமியில் மீத்தேன் உருவாகியது, என்று கருதப் படுகிறது.


இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில்,மீத்தேன் வாயு இருப்பதாக கியூரியாசிட்டி ரோவர் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரிய வந்தது.


எனவே, செவ்வாய்க் கிரகத்துக்கு, மீத்தேன் எப்படி வந்தது,உயிரினங்கள் மூலம் வந்ததா என்றும் ஆராய்ச்சியாளர்கள் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.



15/04/2017
4 Photos - View album

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?