திமிங்கிலங்கள் ஏன் கரை ஒதுங்குகின்றன?
ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து ,மற்றும் ஜப்பான் நாட்டுக் கடற் கரையில் அவ்வப்பொழுது நூற்றுக் கணக்கில் திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் அரை மயக்க நிலையில் கரை ஒதுங்குகின்றன.
இவ்வாறு திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் நூற்றுக் கணக்கில் கரை ஒதுங்குவது ஏன்? என்பது குறித்து இன்றளவும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
தற்பொழுது கப்பல்களில் இருக்கும் சோனார் கருவிகளில் இருந்து அனுப்பப் படும் ஒலி அலைகளால் பாதிப்பு ஏற்பட்டு திமிங்கிலங்களும் டால்பின்களும் கரை ஒதுங்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
http://www.huffingtonpost.com/candace-calloway-whiting/whale-stranding-sonar_b_3997569.html?ir=India
ஆனால் சோனார் கருவிகள் கண்டு பிடிப்பதற்கு முன்பே இது போன்று திமிங்கிலங்கள் பல எண்ணிக்கையில் கரை ஒதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாகக் கடந்த 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய பிறகு, ஒரு மாதத்திற்குப் பிறகே லெவிஸ் ரிச்சர்ட்சன் என்ற ஆங்கிலேயேக் கால நிலை இயல் வல்லுநர், ஒலி அலைகளைப் பயன் படுத்தும் கருவியைக் கண்டு பிடித்து உரிமப் பதிவு செய்தார்.
அதற்குப் பிறகு 1913 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் பேகிம் என்ற இயற்பியல் வல்லுநரும் ஒலி அலைகளை அனுப்பும் கருவி ஒன்றைக் கண்டு படித்து உரிமப் பதிவு செய்தார்.
ஆனால் சோனார் கருவிகளின் பயன் பாட்டுக்கு வருவதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே,1902 ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் கேப் முனை அருகில், ஏராளமான திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இருப்பது ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.
இதன் மூலம் சோனார் கருவிகளில் இருந்து அனுப்பப் படும் ஒலி அலைகளின் பாதிப்பால்தான் திமிங்கிலங்கள் பாதிக்கப் பட்டு கரை ஒதுங்குகின்றன, என்று கூறப் படும் விளக்கம் கேள்விக் குறியாகி விட்டது.
இந்த நிலையில் ஜப்பானிலும்,அந்தமான் தீவிலும்,நியூ சிலாந்திலும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஏராளமான திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கி இருக்கின்றன.
இந்த நிலையில் ஜப்பான் மற்றும் நியூ சிலாந்து நாட்டுக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் எரிமலைகள் வெடிதத்தால் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதற்கு ஆதாரமாக , தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் இருக்கின்றன.
எனவே நில அதிர்ச்சிகளுக்கு முன்பு கடற் கரையில், குறிப்பாக ஜப்பான் மற்றும் நியூ சிலாந்து நாட்டுக் கடல் பகுதியில்,திமிங்கிலங்கள் ஒதுங்கி இருப்பதன் மூலம்,எரிமலைச் செயல் பாட்டால் திமிங்கிலங்கள் பாதிக்கப் பட்டுக் கரை ஒதுங்கி இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.
Comments