ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு...
ஆறரை கோடி ஆண்டுகளுக்கு
முன்பு பூமியை ஒரு விண்கல் தாக்கியதாகவும் அதனால் டைனோசேர்கள் அழிந்தாகவும் அந்த
கால கட்டத்தில் தற்பொழுது உள்ள கண்டங்கள் எல்லாம் தீவுக் கண்டங்களாக இருந்ததாகவும்
நம்பப்
படுகிறது.
அந்த கால கட்டத்தில்
நாம் தற்பொழுது காணும் பாலூட்டி விலங்கினங்கள் வாழ்ந்ததா அல்லது டைனோசர்கள் அழிந்த
பிறகு இந்த பாலூட்டி விலங்கினங்கள் தோன்றியதா என்று நீண்ட காலமாகவே ஆராய்ச்சிகள்
நடைபெற்று வந்தது.
குறிப்பாக ஆறரை கோடி
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்களானது ஆறரை
கோடி ஆண்டுகளுக்கு முன்பு தீவுக் கண்டங்களாக இருந்ததாக நம்பப் படும் இந்தியா ,ஆப்பிரிக்கா,மற்றும் தென் அமெரிக்கா
ஆகிய கண்டங்களில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டது.
இந்தக் கண்டங்கள்
எல்லாம் பத்து முதல் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் தென் துருவப்
பகுதியில் இருந்ததாக நம்பப் படும் கோண்டுவானா என்ற பெருங் கண்டத்தில் இருந்து
பிரிந்ததாக நம்பப் பட்டது.
எனவே பாலூட்டி
வகைகளானது பத்து கோடி ஆணடுகளுக்கு முன்பு ஆதாவது டைனோசர்கள் காலத்திலேயே
வாழ்ந்ததாகவும் ஆனால் டைனோசர் காலத்தில் ஏற்பட்ட பேரழிவில் இருந்து தப்பிப்
பிழைத்து விட்டதாகவும் நம்பப் பட்டது.
அது மட்டுமல்லாது
கோண்டுவாணாக் கண்டமானது பிரிவதற்கு முன்பு பாலூட்டிகளின் மூதாதை கோண்டுவாணாக்
கண்டத்தில் வாழ்ந்ததாகவும் பின்னர் அந்தக் கண்டம் பிரிந்ததால் அந்த அந்த
கண்டங்களில் வாழ்ந்த பாலூட்டி வகைகள் தனித் தனியாக பரிணாம வளர்ச்சி பெற்றதாகவும்
நம்பப் பட்டது.அதாவது பாலூட்டி விலங்கினங்களின் மூததையானது பத்து
கோடி ஆண்டுகளுக்கு முன்பே தென் பகுதிக் கண்டத்தில் தோன்றிப் பரவியதாக நம்பப்
படுகிறது.
இந்த நிலையில் ஆடு மாடு
போன்ற குளம்புக் காலிகளின் மூதாதை விலங்கினத்தின் புதை படிவமானது இந்தியாவில் ஆறு
கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவில் இருந்து கண்டு பிடிக்கப்
பட்டது.
இதற்கு முன்பு இதே வகை
விலங்கினத்தின் புதை படிவங்களானது வட அமெரிக்கக் கண்டத்தில் ,ஆறு கோடியே முப்பது லட்சம்
ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டது.
ஆனால் இந்திய நிலப் பகுதியானது பதினாலு
கோடி ஆண்டுகளுக்கு முன்பே மற்ற தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதாக
நம்பப் பட்ட நிலையில் அத்தக கண்டு பிடிப்பு பல கேள்விகளை எழுப்பியது.ஆனால் இந்திய
ஆராய்ச்சியாளர்களோ பாலூட்டி விலங்கினமானது இந்தியாவிலேயே பரிணாம வளர்ச்சி பெற்று
ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் மோதிய பொழுது மற்ற கண்டங்களுக்கு
பரவியதாக ஒரு விளக்கத்தை முன்வைத்தனர்.இந்தக் கருத்தாக்கமானது கார்டன் ஆப் ஈடன்
என்று அழைக்கப் படுகிறது.
இந்த நிலையில் உருவ
வங்கி (Morpho Bank )என்று அழைக்கப் படும் ஒரு வலைத் தளம் ஒன்றை துவக்கி
அதில் 83 பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்கள் பற்றிய
தகவல்களை இடுகையிட்டு தலைமுடி,பல் முதுகெலும்பு என 4,500
வகை
பண்புகளை ஒப்பிட்டு, டாக்டர்
மாரின் ஒ லியரி என்ற உடற் கூறியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர் ,ஆறு ஆண்டு காலம் மேற்
கொண்ட ஆய்வில் ,ஆறரை
கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவில் வாழ்ந்து மடிந்த ஒரு அணில் போன்ற
விலங்கில் இருந்தே நாம் தற்பொழுது காணும் பாலூட்டி வகைகள் யாவும் பரிணாம வளர்ச்சி
பெற்று இருக்கிறது என்று அறிவித்து இருக்கிறார்கள்.இருக்கிறார்கள்.
ஆதாவது டைனோசர்கள்
அழிந்த பிறகே வட அமெரிக்காவில் வாழ்ந்த புரோட்டோ அன்குலேட்டம் டோனே என்று அழைக்கப்
படும் அந்த பாலூட்டி விலங்கினத்தில் இருந்தே தற்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கும் 5100
க்கும்
அதிகமான பாலூட்டி வகைகளும் பரிணாம வளர்ச்சி பெற்று தோன்றி இருப்பதாக டாக்டர்
மாரின் ஒ லியரி அறிவித்து இருக்கிறார்.
மேலும் அந்த
விலங்கினமானது மற்ற கண்டங்களிலும் வாழ்ந்திருக்கலாம் என்றும் டாக்டர் மாரின் ஒ
லியரி தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் ஆறரை
கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பன்றியின் அளவுள்ள யானையின் மூதாதையின்
எலும்புப் புதை படிவங்கள் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அதே போன்று ஆறரை கோடி
ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் வாழ்ந்து மடிந்த ஒரு குளம்புக் காலியில் புதை
படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
பின்னர் அதே குளம்புக் கால் இனவகையை சேர்ந்த
விலங்கின் புதை படிவங்கள் வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் ஆறரை
கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் இருந்து கண்டு பிடிக்கப் பட்ட்டது.
ஆறரை கோடி ஆண்டுகளுக்கு
முன்பு தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா
மற்றும் இந்தியா ஆகிய கண்டங்களானது உண்மையில் தீவுக் கண்டங்களாக இருந்திருந்தால்
நிச்சயம் வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த விலங்கினத்தில் இருந்து தோன்றிய
விலங்கினங்களானது தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய
கண்டங்களை அடைந்து இருக்க இயலாது.
முக்கியமாக வட
அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த மூதாதை பலூட்டியானது பறக்கும் வகையோ அல்லது
நீந்தும் வகையோ அல்ல என்றும் டாக்டர் மாரின் ஒ லியரி தெரிவித்து இருக்கிறார்.
எனவே ஆறரை கோடி
ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த மூதாதை பாலூட்டி
விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற பாலூட்டி வகைகளின் புதை
படிவங்களானது தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில்
குறிப்பாக ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் காணப் படுவதன் மூலம்
கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருப்பதைப் போன்றே வட பகுதிக் கண்டங்களுடன் நிலத்
தொடர்பு கொண்டு இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
Comments