இத்தாலி நில அதிர்ச்சி... நீயா ? நானா ?


For media

( இந்தக் கட்டுரை எனது ஆய்வு எல்லைக்குள் இல்லை என்றாலும் எனக்குத் தெரிய வந்த சில விபரங்களைப்
பகிர்ந்து கொள்கிறேன்.)
கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் நாள் இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் லா அகுய்லா நகரில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் நூற்றுக் கணக்கானோர் இறந்தனர்.
அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு ‘’பயப்பட ஒன்றுமில்லை’’ என்று தொலைக் காட்சி நிருபருக்கு பேட்டியளித்த பெர்னார்டோ டி பெர்நார்டினிஸ் என்ற விஞ்ஞானிக்கு இத்தாலி நீதி மன்றம் ஆறு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து நான் பல மாதங்களுக்கு முன்பு இணையதளங்களில் படித்தேன்.ஆனால் இந்த விவகாரம் எனது ஆய்வு எல்லைக்குள் வராதாதால் எழுத வில்லை.
இருப்பினும் அறிவியல் ஆய்வுகளில் மனித மனம் போட்டி பொறாமைகளில் சிக்கி எப்படியெல்லாம் செயல்பட வைக்கிறது என்பதற்கு பெர்னார்டோ டி பெர்நார்டினிசின் கதை ஒரு முன்னுதாரணம்.
(கோர்ட்டில் பெர்னார்டோ டி பெர்நார்டினிசின்)

அவர் செய்த குற்றம் என்ன?

அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இத்தாலியில் அங்கும் இங்குமாக சிறிய அளவிலான நில அதிர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டு இருந்தது.
 
அப்பொழுது, மார்ச் 29 அன்று இத்தாலியின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா நகருக்குத் தெற்கில் ஐம்பது கிலோ மீட்டார் தொலைவில் உள்ள சுல்மோனா என்ற நகரில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்படும் என்று ஜியாப்ம்பாலோ ஜியாலினி என்ற ஆராய்ச்சியாளர் ஒரு முன்னறிவிப்பை தனது இணையத் தளத்தில் வெளியிட்டார்.

குறிப்பாக அவர் இயற்பியல் துறை ஆய்வகத்தில் லேப் டெக்னீசியனாக பணி புரிந்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் உலகில் நில அதிர்ச்சி ஏற்படும் இடங்களில் ரேடான் என்ற மனமற்ற நிறமற்ற கதிரியக்க வாயு வெளிப் பட்டு இருப்பது குறித்து ஜியாலினி கேள்விப் பட்டார்.உடன் அதன் அடிப்படையில் நில அதிர்ச்சி ஏற்படப் போவதை முன் கூட்டியே அறிய இயலுமா என்று ஆராய்ச்சியில் ஈடு பட்டு இருக்கிறார்.

இது தொடர்பான ஆராய்ச்சிக்கு அவர் அரசின் உதவியும் கோரி இருக்கிறார்.அவரின் விண்ணப்பம் புவியியல் துறையினாரால் ஏற்கப் படவில்லை.

ரேடான் வாயுக் கசிவிற்கும் நில அதிர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு நிருபிக்கப் படவில்லை என்று புவியியல் துறையினர் தெரிவித்து இருந்தனர்.மேலும் ஜியாலினி ஒரு லேப் டெக்னீசியன் மட்டுமே என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.அதற்குள் ஜியாலினி பணிக் காலம் முடிவடைந்து விட்டது.


(ஜியாப்ம்பாலோ ஜியாலினி)
இருப்பினும் தன் சொந்த செலவில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரின் உதவியுடன் அரசுக் கட்டிடம் உள்பட பள்ளிக் கூடங்களில் ரேடான் வாயுக் கசிவை அறியக் கூடிய கருவிகளை நிறுவி தனது ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு இருக்கிறார்.அப்பொழுதுதான் ரேடான் வாயு திடீரென்று அதிக அளவில் கசிந்து கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்தார்.உடன் தனது இணையத் தளத்தில் இன்னும் ஒரு வாரத்தில் இத்தாலியில் பயங்கர நில அதிர்ச்சி ஏற்படப் போகிறது என்றும் வீடுகளைக் காலி செய்து விட்டு நகரை விட்டு வெளியேறுவது நலம் என்று தெரிவித்து இருந்தார்.
குறிப்பாக அவர் இயற்பியல் துறை ஆய்வகத்தில் லேப் டெக்னீசியனாக பணி புரிந்து கொண்டு இருந்தார்.
தற்பொழுது உள்ள கருவிகள் மூலம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பூமிக்குள் இருந்து ரேடான் வாயுக்கள் சிறிய அளவில் வெளியேறினாலும் கண்டு பிடித்து விட இயலும்.இந்த முறை மிகவும் எளியது.
துருக்கியில் நில அதிர்ச்சிக்கு முன்பு ரேடான் வாயுக்கள் வெளியறி இருக்கிறது.ஆனால் ரேடான் வாயு வெளியேறிய பொழுதெல்லாம் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருக்க வில்லை.அதே போன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுதெல்லாம் ரேடான் வாயு வெளியேறியதில்லை.
இருந்தாலும் ஜியாலினியால் அந்த அறிகுறியை அலட்சியம் செய்ய இயல வில்லை.
அவரின் அறிவிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டது.அத்துடன் தொலைக் காட்சியிலும் அவரின் அறிவிப்பு பற்றிய செய்தி வெளியானது.நகரை பீதி கவ்வியது. நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்தது.
நில அதிர்ச்சி ஏற்பட்ட லா அகுய்லா நகரமானது அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படும் இடம்.எனவே நில அதிர்ச்சிக்கு அந்தப் பகுதி மக்கள் பழகி இருந்தார்கள்.சிறிய அளவில் தொடர் நில அதிர்ச்சிகள் ஏற்படும் பொழுதெல்லாம் அந்தப் பகுதி மக்கள் அருகில் உள்ள சிறிய நகரங்களுக்கு செல்வதுண்டு. குறைந்த பட்சம் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைவதுண்டு.
இந்த நிலையில் ஜியாலினியின் எச்சரிக்கையால் மக்கள் கூட்டம் கூட்டமாக வீட்டைக் காலி செய்து கொண்டு இருந்தனர்.
உடனே புவியியல் துறையினர் அரசு அதிகாரிகள் மூலம் ஜியாலினியின் இணையத் தள அறிவிப்பை வாபஸ் பெறச் செய்தனர்.

அத்துடன் ஜியாலினையை, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கவும் நிர்பந்தம் செய்தனர்,
மேலும் மார்ச் 31 அன்று கருத்தரங்கம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்தனர்.
இந்த நிலையில் ஜியாலினி அறிவித்த படி மார்ச் 29 அன்று லா அகுய்லா நகருக்குத் தெற்கில் உள்ள சுல்மோனா நகரில் நில அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை.
மார்ச் 31 அன்று ,மாநாடு முடிந்த பிறகு தொலைக் காட்சி செய்தியாளர் ஒருவர் நில அதிர்ச்சி ஏற்படுமா ? என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பெர்னார்டோ டி பெர்நார்டினிஸ் ஒரேயடியாக ‘’நோ ப்ராப்ளம்‘’சிறு சிறு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதால் சக்தி வெளியாகி பெரிய நில அதிர்ச்சி ஏற்படாது என்று மாநாட்டில் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்’’ என்று நிருபரிடம் கூறி இருக்கிறார்.
உடன் நிருபர் அப்படியென்றால் ஆபத்து இல்லையா வீட்டுக்கு சென்று ஒயின் அருந்தலாமா ? என்று  தமாஷாக கேட்க... பெர்நார்னிசும் தயங்காமல்
‘’ ஒ தாராளமாக ரெட் ஒயினே அருந்தலாம் ’’ என்று கூற..
உடன் செய்தியாளர் கேமராவைப் பார்த்து ‘’தற்பொழுது சிறிய அளவிலான நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதால் ஆபத்து ஏற்படாது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது ‘’ என்று தெரிவித்து இருக்கிறார். இந்த செய்தியைப் பார்த்த பலர் வீட்டை காலி செய்யும் முயற்சியை கை விட்டு வீட்டிலேயே தங்கி விட்டனர்.

ஆனால் மாநாடு முடிந்த ஒரே வாரத்தில் ஏப்ரல் ஆறாம் நாள்,   லா அகுய்லா நகரில் ரிக்டர் அளவில் 6.3   நில அதிர்ச்சி ஏற்பட்டதில் 309 பேர்  உயிரிழந்தனர்.
அந்த நில அதிர்சிக்குப் பிறகு ஜியாலினி தனது இணைய தளத்தில் ‘’ இப்பொழுது யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும் ‘’ என்று தெரிவித்து இருக்கிறார்’’

ஆனாலும் ஜியலினி கூறிய இடத்திலும் நாளிலும் அளவிலும் நில அதிர்ச்சி ஏற்பட வில்லை.ஜியாலினி கணித்துக் கூறிய நாளுக்குப் பிறகு ஒரு வாரம் கழித்துதான் வேறு இடத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.அத்துடன் ஜியாலினி ரிக்டர் அளவில் நான்கு அளவில் நில அதிர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்து இருந்தார்.ஆனால் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சியானது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் லா அகுய்லா நில அதிர்ச்சியில் தன் இரண்டு பதின்ம வயது பிள்ளைகளைப் பறிகொடுத்த பல் டாக்டர் ஒருவர் ‘’ லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதெல்லாம் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி தோட்டத்திலும் காரிலும் படுத்துக் கொள்வோம் ஆனால் தொலைக் காட்சி செய்தியால் அன்று வீட்டிலேயே தங்கி விட்டோம் ‘’ என்று ஒயின் சாப்பிடச் சொன்ன விஞ்ஞானி மீது வழக்குப் பதிவு செய்தார்.இதே போன்று இன்னும் பலரும் வழக்கு பதிவு செய்தனர்.
நில அதிர்ச்சியை முன் கூட்டியே கணித்துக் கூற இயலாது என்று கூறி எனவே பெர்னார்டிசுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று உலகெங்கும் உள்ள ஐயாயிரத்திற்கும் அதிகமான புவியியல் விஞ்ஞானிகள் கையொப்பமிட்டு இத்தாலி அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிறு சிறு நில அதிர்ச்சிகள் ஏற்பட்டால் சக்தி வெளியாகி பெரிய நில அதிர்ச்சி ஏற்படாது என்று கூறியதற்கு அறிவியல் அடிப்படை ஆதாரம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க,
 ---------------------------------------------------------------------------------
 ( சீனாவில் 1975 ஆம் ஆண்டு சிறு சிறு நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு பெரிய நில அதிர்ச்சி வரும் என்று கணிக்கப் பட்டது.அதன் அடிப்படையில் லட்சக் கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டு ஒரு வாரம் வெட்ட வெளியில் தங்க வைக்கப் பட்டனர்.எதிர்பார்த்த படியே கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு லட்சம் உயிர்கள் காப்பற்றப் பட்டது. )
 ---------------------------------------------------------------------------------
 ‘’ லா அகுய்லா போன்று அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படும் ஒரு நகரில் இருந்து கொண்டு ''ஆபத்து இல்லை'' என்று பெர்னார்டினிஸ் கூறி இருக்க கூடாது ‘’ என்பது முக்கியமாக பார்க்கப் பட்டது.
இதன் அடிப்படையில் புவியியல் துறையினர் அலட்சியமாக இருந்து பலரின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கின்றனர் என்று குற்றம் சாட்டப் பட்டு பெர்னார்டினிசுடன் இன்னும் ஐந்து புவியியல் வல்லுனர்களுக்கும் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டு இருக்கிறது.

தற்பொழுது அமெரிக்கப் புவியியல் கழகம் ஜியாலினியின் ஆராய்ச்சிக்கு நிதி அளித்திருக்கிறது


People listen to the verdict at L'Aquila court, Italy, Monday, Oct. 22. An Italian court has convicted seven scientists and experts of manslaughter for failing to adequately warn citizens before an earthquake struck central Italy in 2009, killing more than 300 people.
பெரிய அளவிலான நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்பு சிறு சிறு நில அதிர்ச்சிகள் ஏற்படுவது உள்பட கிணற்றில் நீர் மட்டம் இறங்குவது நிலத்தின் வெப்ப நிலை உயர்வது ரேடான் வாயு வெளியேறுவது போன்ற பல அறிகுறிகள் ஏற்படுகின்றன.
இதில் முக்கியமாக எரிமலைகளில் இருந்து ரேடான் வாயு வெளிப் படுவது அறியப் பட்டு இருக்கிறது.குறிப்பாக அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படும் ஹாவாய் தீவில் ரேடான் வாயுக்கள் வெளியேறுவது அறியப் பட்டு இருக்கிறது.
எனவே இத்தாலியில் நில அதிர்ச்சிக்கு முன்பு ரேடான் வாயு வெளிப் பட்டு இருப்பது எரிமலைச் செயல் பாட்டையே புலப் படுத்துகிறது.
(இத்தாலி நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள்)
அது மட்டுமல்லாது இத்தாலி நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலைகளைச் சுற்றி உருவாகும் வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலமும் தெரிய வந்துள்ளது.
இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாத வரையில் நில அதிர்ச்சியை முன் கூட்டியே அறிவது கடினம்.
-விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

விஞ்ஞானிகள் கூறிய தவறான விளக்கங்களும், அதற்கான உண்மை காரணங்களும்.