ஈமுக் கோழிகள் எப்படி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றன ?
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் பறக்க இயலாத ஈமுக் கோழிகள்,அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திலும் பாப்புவா நியூ கினியா தீவிலும் காணப் படும் பறக்க இயலாத காசோவாரிப் பறவைகள், நியூ சிலாந்து தீவில் காணப் படும் பறக்க இயலாத கிவி பறவைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து அந்தத் தீவுக் கண்டத்திற்கும் தீவுகளுக்கும் சென்றன? என்பது இன்று வரை விடுவிக்கப் படாத மர்மமாக இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் ஈமுக் கோழிகள்,காசோவரிப் பறவைகள்,நியூ சிலாந்து தீவின் கிவி, தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் நெருப்புக் கோழி போன்ற ரியா மற்றும் குயில் போன்ற டினாமஸ் பறவைகளும்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆஸ்ட்ரிச் என்று அழைக்கப் படும் நெருப்புக் கோழிகளும் பழந்தாடைப் பறவைகள் என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்தது.
இந்தப் பறவைகளின் தாடை அமைப்பானது மற்ற பறவைகளைப் போல் அல்லாது டைனோசர் மற்றும் ஊர்வன வகை விலங்கின் தாடையைப் போல் தொன்மையான அமைப்புடன் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
மற்ற பறக்கக் கூடிய பறவைகளின் மார்பு எலும்பானது கப்பலின் அடிபகுதி போன்று குவிந்து இருப்பதால் அதில் இறக்கைகளை இயக்கும் தசைகள் நன்கு பிணைக்கப் பட்டு பறப்பதற்கு எதுவாக இருக்கின்றன.ஆனால் பழந்தாடைப் பறவைகளின் மார்பு எலும்பானது தட்டையாக இருப்பதால்,அதில் இறக்கைத் தசைகள் வலுவின்றி பொருத்தப் பட்டு இருப்பதால்,இந்தப் பறவைகளால் பறக்க இயலாது.
இதன் அடிப்படையில் இந்தப் பறவைகள் ராட்டைட் என்றும் அழைக்கப் படுகின்றன.ராட் என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு தட்டை என்று பொருள்.அதன் அடிப்படையில் பழந்தாடைப் பறவைகள் ராட்டைட் பறவைகள் என்றும் அழைக்கப் படுகின்றன.
விதி விலக்காகத் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் டினாமஸ் என்ற பழந்தாடைப் பறவையின் தாடை அமைப்பானது ராட்டைட் பறவைகளைப் போல் இருந்தாலும்,அதன் மார்பு எலும்பானது மற்ற பறக்கக் கூடிய பறவைகளைப் போன்று கப்பலின் அடிப் பகுதி போன்று குவிந்து இருப்பதாலும், அதில் இறக்கைத் தசைகள் நன்கு பொருந்தி இருப்பதாலும் டினாமஸ் பறவையால் ஓரளவு பறக்க முடியும்.
அதனால் டினாமஸ் பறவை பழந்தாடைப் பறவை என்று அழைக்கப் பட்டாலும் ராட்டைட் பறவை இனமாகக் கருதப் படுவதில்லை.மாறாக ராட்டைட் பறவைகளின் நெருங்கிய சொந்தமாக வகைப் படுத்தப் பட்டுள்ளது.
தற்பொழுது ராட்டைட் பறவைகள் பூமியின் தென் கோளப் பகுதிகளில் மட்டும் காணப் பட்டாலும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டங்களிலும் ராட்டைட் பறவைகள் வாழ்ந்திருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
உதாரணமாக ஐரோப்பாக் கண்டத்தில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பேலியோட்டிஸ் என்று அழைக்கப் படும் ஒரு பறவையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.பறக்கக் கூடிய பறவையாக இருந்த அந்தப் பறவையானது தற்பொழுது ஐரோப்பாக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆஸ்ட்ரிச் பறவையின் மூதாதை என்று தெரிய வந்துள்ளது.
எனவே ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு ஆஸ்ட்ரிச் பறவைகள் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்தே வந்திருப்பதற்கு ஆதாரமாக இந்தப் புதை படிவம் உள்ளது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்திலும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த லித்தோர்னிதிட்ஸ் என்ற பறவையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.அந்தப் பறவையானது தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் டினாமஸ் பறவையின் இனம் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் டினாமஸ் பறவையும்,வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வந்திருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் புலனாகிறது.
ஆனால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கக் கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டமும் வட பகுதிக் கண்டங்களுடன் தொடர்பின்றி இருந்ததாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இதன் அடிப்படையில் தற்பொழுது தென் பகுதிக் கண்டங்களிலும் தீவுகளிலும் ராட்டைட் பறவைகள் காணப் படுவதற்கு அந்தப் பறவைகள் தென் பகுதிக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து கோண்டுவாணா என்ற கண்டமாக இருந்த பொழுது அந்தக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சியில் தோன்றி மற்ற கண்டங்களுக்குப் பரவியதாக நம்புகின்றனர்.
உதாரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முற்றாக அழிந்த யானைப் பறவை என்று அழைக்கப் படும் ராட்டைட் பறவையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
அந்தப் பறவையானது பத்து அடி உயரத்துடனும் இருநூற்றி எழுபத்தி ஐந்து கிலோ எடையுடனும் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதே தீவில் கண்டு பிடிக்கப் பட்ட யானைப் பறவையின் முட்டைகள் கோழி முட்டையை விட நூற்றி அறுபது மடங்கு பெரியதாக இருந்தது.அதன் கொள்ளளவு ஏழு லிட்டராக இருந்தது.
இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் நியூ சிலாந்து தீவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த மோவா என்று அழைக்கப் படும் ஆறு அடி உயரமும் முப்பத்தி ஐந்து கிலோ எடையும் உள்ள ராட்டைட் பறவையின் புதை படிவங்கள் கண்டு படிக்கப் பட்டது.
இதன் அடிப்படையில் இந்த நிலப் பகுதிகள் எல்லாம் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்து கோண்டுவாணா என்ற கண்டமாக இருந்த பொழுது பறக்கும் தன்மையை இழந்த மூதாதை ராட்டைட் பறவைகள் கோண்டுவாணாக் கண்டம் முழுவதும் சுற்றித் திரிந்து கொண்டு இருந்ததாகவும் ,அதன் பிறகு கோண்டுவாணாக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து நகர்ந்த பொழுது, அந்தக் கண்டத்துடன் பிரிந்த ராட்டைட் பறவைகள் காலப் போக்கில் ஆஸ்ட்ரிச் பறவையாக பரிணாம வளர்ச்சி அடைந்ததாகவும்,அதே போன்று கோண்டுவாணாவில் இருந்து மடகாஸ்கர் தீவு பிரிந்து நகர்ந்த பொழுது, அந்தத் தீவுடன் பிரிந்து சென்ற ராட்டைட் பறவைகள் யானைப் பறவையாக பரிணாம வளர்ச்சி அடைந்ததாகவும்,ஆஸ்திரேலியாக் கண்டம் பிரிந்து நகர்ந்த பொழுது,அதன் கண்டத்துடன் பிரிந்த ராட்டைட் பறவைகள்,ஈமு மற்றும் காசோவரிப் பறவைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்ததாகவும்,நியூ சிலாந்து தீவு பிரிந்து நகர்ந்த பொழுது,அந்தத் தீவுடன் பிரிந்த ராட்டைட் பறவைகள் மோவா மற்றும் கிவிப் பறவைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்ததாகவும்,1974 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் தேசிய அருங் காட்சியகத்தைச் சேர்ந்த ஜோயல் கிராகிராப்ட் ஒரு விளக்கத்தைத் தெரிவித்தார்.
ஆனால் கோண்டுவாணாக் கருத்தின் படி ஆப்பிரிக்கக் கண்டமானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டு வாணாக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதாக நம்பப் படுகிறது.
எனவே ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு ராட்டைட் பறவைகள் வந்திருக்க சாத்தியம் இல்லை.
எனவே ராட்டைட் பறவைகள் எந்தக் காலத்தில், ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தது என்று அறிவதற்காக, ராட்டைட் பறவைகளின் மரபணுக்கள் சேகரிக்கப் பட்டு ஒப்பாய்வுகள் மேற்கொள்ளப் பட்டது.
இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு சிக்காக்கோவில் உள்ள தேசிய அருங் காட்சியகத்தைச் சேர்ந்த ஜான்ஹார்ஸ்மேன் குழுவினர் மேற்கொண்ட மரபணு ஒப்பாய்வில், டினமஸ் பறவையானது ராட்டைட் பறவை இனத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டு இருப்பதன் அடிப்படையில் டினமஸ் பறவை ராட்டைட் பறவை இனத்திலேயே சேர்க்கப் பட்டது.
அப்படியென்றால் ராட்டைட் பறவையின் மூதாதையும் டினாமஸ் போன்ற ஒரு பறக்கக் கூடிய மூதாதை என்றும் கருதப் பட்டது.
இதன் அடிப்படையில் கோண்டுவாணாக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து சென்ற கண்டங்களுக்கு ராட்டைட் பறவைகளின் மூதாதை பறந்து சென்று அந்தக் கண்டங்களை அடைந்த பிறகு சம வெளி வாழ்க்கையை மேற்கொண்டதால் ஒவ்வொரு கண்டத்திலும் ஒன்றுக் கொன்று வேறு பட்ட, ராட்டைட் பறவைகள் பரிணாம வளர்ச்சி அடைந்ததாக நம்பப் பட்டது.
இதில் தென் அமெரிக்கக் கண்டத்துக்குப் பறந்து சென்ற ராட்டைட் பறவைகளில் ஒரு பிரிவு பறக்கும் தன்மையை இழந்து ரியா பறவை இனமாகவும் இன்னொரு பிரிவு பறக்கும் தன்மையை இழக்காமல் டினாமஸ் இனமாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகவும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மாத்யூ பிலிப்ஸ் குழுவினர் மேற்கொண்ட மரபணு ஆய்வில்,ராட்டைட் பறவைகள் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் டைனோசர்கள் அழிந்தது.அதனால் காலியாக விடப் பட்ட புல்வெளியில் இறங்கி கண்டதையும் தின்றதில் ராட்டைத் பறவைகள் பருத்து பறக்க இயலாமல் உருவானதாக டாக்டர் மாத்யூ பிலிப்ஸ் தெரிவிக்கிறார்.
அத்துடன் ராட்டைத் பறவைகள் வட பகுதிக் கண்டங்களிலேயே தோன்றியதாகவும் டாக்டர் மாத்யூ பிலிப்ஸ் தெரிவிக்கிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள தொல் மரபணு ஆய்வகத்தைச் சேர்ந்த,கிரண் மிட்செல் என்ற டாக்டர் பட்டதிற்கான ஆராய்ச்சி மாணவர்,நியூ சிலாந்து தீவு அருங் காட்சியத்தில் இருந்த மடகாஸ்கர் தீவின் யானைப் பறவையின் எலும்பில் இருந்து மரபணுக்களைப் பிரிந்து எடுத்து மற்ற ராட்டைட் பறவைகளின் மரபணுக்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வில் மடகாஸ்கர் தீவின் யானைப் பறவையும், நியூ சிலாந்து தீவின் கிவிப் பறவையும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது மூததையில் இருந்து பிரிந்து இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவும் நியூ சிலாந்து தீவும் தனித் தனித் தீவுகளாக உருவாகி விட்டதாக நம்பப் படுவதால் ,யானைப் பறவையின் மூதாதையானது நியூ சிலாந்து தீவில் இருந்து பதினோராயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் பறந்து சென்று மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்க வேண்டும் அல்லது கிவிப் பறவையின் மூதாதை மடகாஸ்கர் தீவில் இருந்து பறந்து சென்று நியூ சிலாந்து தீவை அடைந்து இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் இந்த முடிவானது மிகவும் எதிர் பாராத முடிவு என்றும் தெரிவித்து இருக்கிறார்.
கிரெனின் ஆய்வு முடிவு பற்றி டாக்டர் கிராகிராப்ட்டிடம் கருத்து கேட்கப் பட்டதற்கு,’’போதுமான அளவுக்கு ஆதாரம் இல்லை’’ என்றும் ‘’இந்த முடிவுடன் உடன் படவில்லை’’ என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று ராட்டைட் பறவைகளின் மரபணு ஆய்வில் ஈடு பட்ட டாக்டர்.ஹேடார்ட் அவர்களும்’’இது ஒரு நல்ல கருத்துதான் ஆனால் பெருமளவு யூகம்’’ என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இவர்கள் இருவருமே இன்னும் ஆதாரங்கள் திரட்டப் பட வேண்டும் என்றும், ஆனால் ராட்டைட் பறவைகள் பற்றிய மர்மம் நீண்ட காலம் நீடிக்காது என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
நியூ சிலாந்து தீவில் கிவி மற்றும் மோவா என இரண்டு வகை ராட்டைட் பறவைகள் வாழ்ந்த நிலையில் அவைகள் ஒன்றுக் கொன்று நெருங்கிய இனமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப் பட்டதற்கு முற்றிலும் முரணாக ,மோவா பறவையானது பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் டினாமஸ் பறவையின் நெருங்கிய சொந்தமாக இருக்கிறது.
இந்த நிலையில் நியூ சிலாந்து தீவின் இன்னொரு ராட்டைட் பறவையான கிவிப் பறவை யானது ,பதினோராயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் வாழ்ந்த யானைப் பறவையின் நெருங்கிய சொந்தமாக இருப்பது விநோதமாக இருக்கிறது.
இவ்வாறு நியூ சிலாந்து தீவுக்கு ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகள் இரண்டு முறை குடியேறி இருப்பது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது.எனவே தரை வழித் தொடர்பு வழியாகவே இந்தக் குடியேற்றம் நிகழந்து இருக்க வேண்டும்.
இந்த இரண்டு நிலப் பகுதிகளுக்கும் இடையில் கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது தரை வழித் தொடர்பு இருந்திருக்கிறது.
உதாரணமாக தற்பொழுது இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் உள்ள சுல வெசித் தீவில் காணப் படும் கஸ்கஸ் என்று அழைக்கப் படும் விலங்கானது,வயிற்றில் உள்ள பையில் குட்டிகளைச் சுமந்து பராமரிக்கும் ஆஸ்திரேலியா நாட்டின் கங்காரு இனத்தைச் சேர்ந்தது.
தற்பொழுது நாம் காணும் ஐயாயிரத்தி நானூறு வகையான பாலூட்டி வகை விலங்கினங்கள் யாவும், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர்கள் அழிந்த பிறகு, வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த புரோட்டோ அங்குலேட்டம் டோனா என்று, பெயர் சூட்டப் பட்ட, ஒரு மூதாதை விலங்கில் இருந்தே பரிணாம வளர்ச்சியில் உருவானதாக, ஸ்டோனி ப்ரூக் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மாவ்ரின் ஒ லியரி என்ற உடற்கூறியல் வல்லுநர் புதை படிவ ஒப்பாய்வில் கண்டு பிடித்துள்ளார்.
மேலும் அவர், அந்த மூதாதைப் பாலூட்டி விலங்கினமானது நீந்தவோ பறக்கவோ இயலாத விலங்கு என்றும், அந்த விலங்கானது மற்ற கண்டங்களிலும் வாழ்ந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
ஆனால் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்துடன் நிலத் தொடர்பின்றி இருந்ததாக நம்பப் படும் தென் அமெரிக்கக் கண்டத்தில், ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அல்சிடெடோர் பிக்னியா என்ற பாலூட்டி விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு படிக்கப் பட்டது.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பன்றியின் அளவுள்ள மூதாதை யானையின் புதை படிவங்களை,பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் இமானுவேல் கீயர் பிராண்ட் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவும், ஆபிரிக்காவும் தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்திருக்கிறது. இந்த நிலையில் வட பகுதிக் கண்டங்களில் ராட்டைட் பறவைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதால், ராட்டைட் பறவைகள் தரை வழியாகவே தென் அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் வந்திருக்கின்றன.
இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திலும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டிங்கமாரா என்று பெயர் சூட்டப் பட்ட குளம்புக் கால் விலங்கின் பற்கள் கண்டு படிக்கப் பட்டுள்ளது.
எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதும், அதனால் ஆஸ்திரேலியாக் கண்டமானது ஆசியக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருப்பதும் புதை படிவ ஆதாரம் மூலம் நிரூபணமாகியுள்ளது.
எனவே ஈமுக் கோழிகள் உள்பட மற்ற ராட்டைட் பறவைகளும் ஆஸ்திரேலியாவுக்கும் நியூ சிலாந்துக்கும் தரைவழித் தொடர்பு வழியாக சென்று இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
Comments