பயங்கரப் பறவைகள் எப்படிக் கடலைக் கடந்தன ?
பயங்கரப் பறவைகள் எப்படிக் கடலைக் கடந்தன ?
பல்வேறு கண்டங்களில் ஒரே வகையான விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு ,தற்பொழுது உள்ள கருத்தின் அடிப்படையில் விலங்கியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
உதாரணமாக ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கக் கண்டத்தில் ஏழு அடி உயரமும், நூற்றி ஐம்பது கிலோ எடையும் உடைய ராட்சதப் பறவைகள் வாழ்ந்து இருப்பது ,அந்தக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
போரஸ்ராஸ்ட்ரிட்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவைகள் பயங்கரப் பறவைகள் என்றும் அழைக்கப் படுகின்றன.இந்தப் பறவைகளால பறக்க இயலாது.
இந்தப் பறவைகள் ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்திலும் வாழ்ந்து இருப்பது, டெக்சாஸ் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனால் வட அமெரிக்கக் கண்டத்துக்கு இந்தப் பறவைகள் எப்படி வந்தது என்று விலங்கியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.
ஏனென்றால், தென் அமெரிக்கக் கண்டமானது தென் துருவப் பகுதியில் இருந்ததாக நம்பப் படும் கோண்டுவானா என்ற ஒரு பெருங் கண்டத்தில் இருந்து, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனியாகப் பிரிந்து, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
தற்பொழுது வட அமெரிக்கக் கண்டதுக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில் பாலம் போன்று இருக்கும் பனாமா நிலப் பகுதியானது, முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் நிலத் தொடர்பு ஏற்பட்டு, விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து அடுத்த கண்டத்துக்கு இடம் பெயர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் டெக்சாஸ் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட பயங்கரப் பறவையின் புதை படிவங்கள் ஐம்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டது.
எனவே பனாமா நிலப் பாலம் உருவாநதாக நம்பப் படும் காலத்துக்கு இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பயங்கரப் பறவைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வட அமெரிக்கக் கண்டத்துக்கு எப்படி வந்தன? என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு,டெக்சாஸ் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட பயங்கரப் பறவையின் புதை படிவத்தின் தொண்மையை மதிப்பிட்ட,ப்ளோரிடா மாகாண அருங் காட்சியகத்தைச் சேர்ந்த, பேராசிரியரும்,தொல் விலங்கியல் வல்லுநருமான டாக்டர்,புரூக் மேக் பேடன் , இந்தப் பறவை, எப்படி நிலத் தொடர்பு இல்லாத கண்டங்களுக்கு இடம் பெயர்ந்தன? என்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிய வில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் பல தீவுகள் தொடர்ச்சியாக இருந்தன.ஆனால் அதன் வழியாக இந்தப் பறவைகள் நீந்தி வந்ததா?அல்லது அடுத்தடுத்து இருந்த தீவுகள் மூலம் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் கடலில் மிதந்து வந்ததா? என்று எங்களுக்குத் தெரிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள அல்ஜீரியா நாட்டிலும் பயங்கரப் பறவைகள் வாழ்ந்து இருப்பது,அந்த நாட்டில், நான்கு கோடியே எண்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் இருந்து கண்டு பிடிக்கப் பட்ட, பயங்கரப் பறவையின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அந்தப் பறவைக்கு லாவகேட் ஏவிஸ் ஆப்பிரிக்கானா என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.
ஆனால் தென் அமெரிக்கக் கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டமும் கோண்டுவாணாக் கண்டத்தில் இருந்து பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து விட்டதாக புவியியல் வல்லுனர்கள் நம்பும் நிலையில் இது எப்படி சாத்தியம்?
இதே போன்று அத்துடன் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா மட்டுமின்றி,ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களும் தனித் தனித் தீவுகளாக இருந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
எனவே பயங்கரப் பறவைகள் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்தது? என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தின் பயங்கரப் பறவையின் புதை படிவதைக் கண்டு பிடித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுநர் சிசிலி மாவெரர் சாவெயர் இரண்டு விளக்கத்தை முன் மொழிந்து இருக்கிறார்.
ஒன்று பயங்கரப் பறவையின் மூததையானது பறக்கும் தன்மையுடன் இருந்து அட்லாண்டிக் கடலைக் கடந்துது ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்த பிறகு தரை வாழ் வாழ்க்கையை மேற்கொண்டு இருக்க வேண்டும்.அதனால் பறக்கும் தன்மையை இழந்து இருக்க வேண்டும்.
அதனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பயங்கரப் பறவைகளின் எலும்பு அமைப்பைப் போலவே ,தென் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பயங்கரப் பறவையின் எலும்பு அமைப்புகளும் உருமாறி இருக்கலாம். இந்த நிகழ்வு ஒத்த பரிணாம வளர்ச்சி என்று அழைக்கப் படுகிறது.
அல்லது தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் அட்லாண்டிக் கடல் பகுதியை கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் கடலில் தத்தளித்த படி பயங்கரப் பறவைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்க வேண்டும் என இரண்டு கருத்தை முன் மொழிந்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஐரோப்பாக் கண்டத்திலும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரப் பறவைகள் வாழ்ந்து இருப்பது பிரான்ஸ் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட எலும்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அந்த எலும்புகளை ஆய்வு செய்த டாக்டர் டெல்பின் ஆங்க்ஸ்ட் வெளியிட்ட ஆய்வறிக்கையில், மேலே குறிப்பிட்ட இரண்டு கருத்துக்களையும் நிராகரித்து இருக்கின்றனர்.
ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பயங்கரப் பறவையின் எலும்புகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட எலும்புகளை ஒத்திருப்பதால் பயங்கரப் பறவைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்து இருக்கலாம் என்று டாக்டர் ஆங்க்ஸ்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் அந்தக் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டதுக்கும் ஆபிரிக்கக் கண்டஹ்டுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் இருந்ததாக நம்பப் படுகிறது.
அதன் அடிப்படையில் பயங்கரப் பறவைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து டெதிஸ் கடல் வழியாக கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் கடலில் தத்தளித்த படி ஐரோப்பாக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று டாக்டர் ஆங்க்ஸ்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் தென் அமெரிக்கக் கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனித் தனியாகப் பிரிந்து விட்டதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.அதன் பிறகு தென் அமெரிக்கக் கண்டம் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது உள்ள இடத்துக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
பேலியோசீன் என்று அழைக்கப் படும் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில், தென் அமெரிக்கக் கண்டதுக்கும் ஆப்பிரிக்கக் கண்டதுக்கும் இடையில் தொலைவு குறைவாக இருந்ததால் அந்தக் காலத்தில் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் பயங்கரப் பறவைகள் கடலில் தத்தளித்த படி தென் அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்றும், ஆனால் இயோசின் என்று அழைக்கப் படும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள தொலைவானது ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்து விட்டதாகவும், அதனால் அந்த காலத்தில் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலம் பயங்கரப் பறவைகள் தென் அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்காவை அடைந்து இருக்க இயலாது என்றும் டாக்டர் ஆங்க்ஸ்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்ட பயங்கரப் பறவைகளின் எலும்புகள் ஒரே மாதிரி இருப்பதன் அடிப்படையில்,பயங்கரப் பறவைகளின் மூதாதை பறக்கும் தன்மையுடன் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்த பிறகு,அதன் பின் தோன்றல்கள், தென் அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட எலும்பின் அமைப்பைப் போலவே பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் என்ற கருத்தையும் நிராகரித்து இருக்கின்றனர்.
ஏனென்றால் ஒரே இன விலங்கினங்கள் வெவ்வேறு பகுதிகளில் லட்சக் கணக்கான ஆண்டுகளாக ஒன்றுக் கொன்று தொடர்ர்பின்றி வாழ்ந்து கொண்டு இருந்தால் காலப் போக்கில் இரண்டு இனங்களுக்கும் சிறிதலவாவது வேறு பாடு தோன்றி விடும்.
ஆனால் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்ட பயங்கரப் பறவைகளின் எலும்பின் அமைப்புகள் மிகவும் ஒத்து இருந்தது.
இதன் அடிப்படையில், டாக்டர் டெல்பின் ஆங்க்ஸ்ட் குழுவினர்,ஒத்த பரிணாம வளர்ச்சி கருத்தை நிராகரித்து இருக்கின்றனர்.
எனவே தற்பொழுது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் ரியோ கிரான்ட் மேடு மற்றும் வால்விஸ் மேடு என்று அழைக்கப் படும் இரண்டு கடலடி மேட்டுப் பகுதிகள், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடலுக்கு மேலே தீவுகளாக இருந்திருக்கலாம் என்றும், அதனால் அந்தத் இருந்த தீவுகள் வழியாகவும் பயங்கரப் பறவைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்றும் விலங்கியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்
அட்லாண்டிக் கடலைக் கடந்த கெட்ட வாடைப் பறவை
வோட்சின் என்று அழைக்கப் படும் கோழி போன்ற பறவைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் அமேசான் ஆற்றுப் பகுதியில் உள்ள காடுகளில் மரங்களில் காணப் படுகின்றன.
இந்தப் பறவைகளால் அதிக தூரம் பறக்க இயலாது.மரத்துக்கு மரம் மட்டுமே பறக்கும்.அதிக பட்சம் ஆயிரம் அடி தொலைவுக்கு மட்டுமே இந்தப் பறவைகளால் பறக்க இயலும்.
இந்தப் பறவைகளின் குஞ்சுகள் பொறிந்த பிறகு, அறுபது முதல் எழுபது நாட்களுக்கு பறக்க இயலாது.ஆனால் அந்தக் குஞ்சுகளுக்கு இறக்கைப் பகுதியில் இருக்கும் வளை நகதைக் கொண்டு மரங்களில் ஏறும்.
குறிப்பாக ஹோவாட்சின் பறவைகளின் உணவுப் பழக்கம் விநோதமானது.இளந்தளிர் மற்றும் மொட்டுக்களை உண்ணும் இந்தப் பறவையானது, ஆடு மாடுகளைப் போன்று வயிற்றில் பாக்க்டீரியாக்களின் உதவியுடன் உணவைச் செரிக்கிறது.
இந்த உணவுப் பழக்கத்தால் இதன் வயிறு கனமுடையதாக இருக்கிறது.எனவே இந்தாப் பறவையால் பறக்க இயலாது.அத்துடன் இதன் உணவும் பழக்கத்தால், இந்தப் பறவையிடம் பசு உரம் போன்ற வாடையுடன் இருக்கும், என்பதால் இந்தப் பறவையானது கெட்ட வாடைப் பறவை என்றும் அழைக்கப் படுகிறது.
நீண்ட காலமாகவே இந்தப் பறவை தென் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த பறவை என்று நம்பப் பட்டு வந்தது.
இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு ,பிரேசில் பகுதியில் இந்தப் பறவையில் மேற்கை எலும்பு மற்றும் தோள் பட்டை எலும்பின் புதை படிவங்கள் 22-24 கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர்,ஜெரால்ட் மேயர் என்ற பறவை இயல் வல்லுநர் கண்டு பிடித்து, அதற்கு வோட்சின் ஏவிஸ் லாகுஸ்ட்ரிஸ் என்று பெயரிட்டார்.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் நமீபியாப் பகுதியில் பதினேழு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட்டு ,நமீபி ஏவிஸ் லாகுஸ்ட்ரிஸ் என்று பெயரிடப் பட்ட, ஒரு பறவையின் எலும்புப் புதை படிவங்கள் முதலில் கொக்கு இனத்தைச் சேர்ந்தது என்று கருதப் பட்டது.
அதை ஆய்வு செய்த டாக்டர் ஜெரால்ட் மேயர்,என்ற பறவையியல் வல்லுநர் , அந்தப் பறவையானது வோட்சின் பறவை இனத்தைச் சேர்ந்தது என்று கண்டு பிடித்தார்.
இது போன்று ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்கள் காணப் படுவதற்கு தற்பொழுது இரண்டு விதமான விளக்கங்கள் கூறப் படுகின்றன.
கண்டங்கள் ஒன்றாக இருந்து பிரிந்ததால் கண்டங்களுடன் விலங்கினங்களும் பிரிந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இதே போன்று கண்டங்கள் பிரிந்த பிறகு பரிணாம வளர்ச்சியில் உருவான விலங்கினங்களின் புதை படிவங்கள்,கண்டங்களில் காணப் படுவதற்கு ,அந்த விலங்கினங்கள், கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
வோட்சின் பறவையின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தெற்கு அட்லாண்டிக் கடல் உருவானதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் வோட்சின் பறவை இனமானது இரண்டு கோடி ஆணடுகளுக்கு முன்புதான் பரிணமித்து இருக்கிறது.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் தென் அமெரிக்காவில் இருபத்தி மூன்று ஆண்டுகள் தொண்மையான் வோட்சின் புதை படிவமும் ,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஒரு கோடியே எழுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான வோட்சின் புதை படிவமும் காணப் படுகிறது.
ஆனால் தென் அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட வோட்சின் பறவையின் புதை படிவத்தை விட,ஆப்பிரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட வோட்சின் புதை படிவமனது தொண்மை குறைவாக இருந்தாலும் ,அதன் எலும்பு அமைப்புகளானது அதிக தொன்மைப் பண்புடன் இருப்பதாகவும் டாக்டர் ஜெரால் மேயர் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடல் நீரோட்டமானது, கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு திசை நோக்கி ஓடியதாகவும்,அதன் மூலம் ஏற்கனவே குரங்குகள் கொறித்து உண்ணிகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்து இருப்பதாகவும், டாக்டர் ஜெரால் மேயர் தெரிவித்து இருக்கிறார்.
அதனால் வோட்சின் பறவைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்தை ,கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் கடலில் பல நாட்கள் மிதந்த படி அடைந்து இருக்கிறது.என்று டாக்டர் ஜெரால் மேயர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பறவை இயல் வல்லுனர்கள், பாரீசில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப் பட்ட ஒரு பறவையின் எலும்புப் புதை படிவங்களை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் மூன்று கோடியே நாற்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையுள்ள அந்தப் பறவையானது வோட்சின் பறவையின் புதை படிவங்கள் என்று அறிவித்து இருக்கின்றனர்.அதற்கு புரோட்டோசின் பாரிசென்சிஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
தற்பொழுது ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட வோட்சின் பறவையின் புதை படிவமே அதிக தொன்மையுள்ளதாக இருக்கிறது.
எனவே வோட்சின் பறவை இனம் எங்கே பரிணாம வளர்ச்சி பெற்று எப்படி மற்ற கண்டங்களுக்குப் பரவியது/ என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் ஜெரால்ட் மேயர், இந்தக் கண்டு பிடிப்பானது ஏற்கனவே நாங்கள் கூறிய வோட்சினின் அட்லாண்டிக் கடல் வழிப் பரவல் கருத்துக்கு சவால் விடுவது போல் இருந்தாலும் கூட, வோட்சின் பறவையின் எலும்புப் புதை படிவங்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட வில்லை.
அத்துடன் வோட்சின் பறவையானது ஐரோப்பாக் கண்டத்தில் ஏற்கனவே அழிந்து விட்ட நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் சமீப காலத்தில் வாழ்ந்து இருக்கிறது.
இதன் மூலம் வோட்சின் பறவை இனமானது மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்து இருக்கிறது.அதன் எஞ்சிய இனமே தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படுகிறது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டமும் ஐரோப்பாக் கண்டமும் தீவுக் கண்டங்களாக இருந்ததாக நம்பப் பட்ட கால கட்டத்திலும் ,இந்த இரண்டு கண்டங்களிலும் ஒரே வகையான விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் கடல் மட்டம் தாழ்வாக இருந்து அதன் காரணமாக கிரீன்லாந்து தீவுக்கு அருகில் ஒரு நிலத் தொடர்பு இருந்து, அதன் வழியாக விலங்கினங்களும் தாவரங்களும் இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
ஒப்போசம், கரப்பன் பூச்சி,முந்திரி,
ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த பிறகு ஒரு கோடி ஆண்டு காலமாக ஐரோப்பாவுக்கு வயிற்றுப் பைப் பாலூட்டிகள் என்று அழைக்கப் படும் கங்காரு வகை விலங்கினங்கள் நுழைய வில்லை என்றே கருதப் பட்டது.
இந்த நிலையில் நெதர்லாந்த்தில் ஒரு கல் குவாரியில் இருந்து எடுக்கப் பட்ட இரண்டு மில்லி மீட்டர் அளவுள்ள பல்லை ஆய்வு செய்ததில் அந்தப் பல், தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஒப்போசம் போன்ற வயிற்றுப் பைப் பாலூட்டி விலங்கின் பல் என்பது தெரிய வந்தது.
அந்த விலங்குக்கு மாஸ்ட்ரிக்சிஸ்ட் டெல்பிஸ் மெயுரிஸ்மெஸ்ட்டி என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கலிபோர்னியாவில் உள்ள புனித மேரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அறிவியல் பிரிவுத் தலைவர் டாக்டர்,ஜூட் காஸ் ஆறரை கோடி ஆண்டுகள் முதல் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் ,ஐரோப்பாக் கண்டதுக்கும் வட அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில், கிரீன்லாந்து தீவு வழியாக நிலத் தொடர்பு இருந்து, அதன் வழியாக ஒப்போசம் போன்ற வயிற்றுப் பைப் பாலூட்டி விலங்கினங்கள், வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்து இருக்கலாம் என்று ஒரு யூகத்தைத் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக அவர்,வயிற்றுப் பைப் பாலூட்டிகள், வட அமெரிக்கக் கண்டத்தின் நியூ பவுண்ட் லேண்ட் கடற் கரையுடன் ,பாபின் தீவு,கிரீன்லாந்து,பாரோ தீவு மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகிய நிலப் பகுதிகள் ஐரோப்பாக் கண்டம் வரைக்கும் தொடர்ச்சியாக இணைந்து இருந்ததாகவும் அதன் வழியாக வயிற்றுப் பை பாலூட்டிகள் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பாக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று யூகிக்கிறார்.
அத்துடன் அந்தக் காலத்தில் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கலாம் என்றும் டாக்டர்,ஜூட் காஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று பிரான்ஸ் நாட்டின் தென் மேற்குப் பகுதியில் பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் ஒரு பைப் பாலூட்டி விலங்கின் பல்லைப் பாரிசைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் டாக்டர்.இம்மானுவேல் கீயர் பிரான்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுனர் தலைமயிலான குழுவினர் கண்டு பிடித்தார்.
இதற்கு முன்பு இந்த இனத்தைச் சேர்ந்த விலங்கின் பற்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அவர்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்க மற்றும் ஐரோப்பாக் கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது என்று டாக்டர்.இம்மானுவேல் கீயர் பிரான்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
அர்கான்டியோ டெல்பிஸ் மர்காண்டி என்று பெயர் சூட்டப் பட்ட அந்த விலங்கின் புதை படிவமனது, உலக அளவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட பைப் பாலூட்டி விலங்கின் புதை படிவங்களிலேயே மிகவும் தொன்மையான ஒன்று என்றும், இந்த விலங்கினத்தில் இருந்தே தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு பைப் பாலூட்டிகள் இடம் பெயர்ந்து இருக்கின்றன என்றும், டாக்டர்.இம்மானுவேல் கீயர் பிரான்ட் தெரிவித்து இருக்கிறார்.
ஐரோப்பாவுக்கு வந்த அமெரிக்கக் கரப்பன் பூச்சிகள்
எக்டோபயஸ் என்று அழைக்கப் படும் கரப்பான் பூச்சி இனத்தில் உள்ள எழுபது வகையான சிற்றினங்கள் தற்பொழுது ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஊர்ந்து கொண்டு இருக்கின்றன.
ஏற்கனவே ஐரோப்பாவில் பால்டிக் கடல் பகுதியில் நான்கு கோடியே நாற்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான மரப் பிசினில் எக்டோபயஸ் இனத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சியின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் எக்டோ பயஸ் இனக் கரப்பான் பூச்சிகள் ,ஐரோப்பாக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கும் என்று நம்பப் பட்டது
இந்த நிலையில் தற்பொழுது எக்டோ பயஸ் இனக் கரப்பான் பூச்சியின் புதை படிவங்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் கொலராடோ பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தற்பொழுது எக்டோ பயஸ் இனக் கரப்பான் பூச்சிகள் வட அமெரிக்கக் கண்டத்தில் பரிணமித்து ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்து சேர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தக் கரப்பான் பூச்சிகள் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அலாஸ்கா வழியாக பெர்ரிங் கடல் பகுதியில் முன்பு இருந்த நிலத் தொடர்பு வழியாக, ஆசியக் கண்டத்திற்கு வந்த பிறகு ஐரோப்பாவுக்கு வந்து இருக்கலாம்,ஆனால் ஆசியப் பகுதியில் இந்த இனத்தின் புதை படிவங்கள் இது வரை கண்டு பிடிக்கப் பட வில்லை.
எனவே இந்தப் பூச்சிகள் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கிரீன் லாந்து தீவு வழியாக ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
அதற்கு ஏதுவாக ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமும் தாழ்வாக இருந்து இருக்கலாம் என்றும்,அந்தக் காலத்தில் அட்லாண்டிக் கடல் குறுகலாக இருந்திருக்கலாம் என்றும், அதனால் எக்டோ பயஸ் கரப்பான் பூச்சிகள் கனடா,கிரீன்லாந்து வழியாக ஐரோப்பாக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்றும், இந்தப் பூச்சியின் புதை படிவத்தை ஆய்வு செய்த ,அமெரிக்காவின் தேசிய அருங்கட்சியகத்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர், கான்ராட் லபான்டிரா கனார்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
கடல் கடந்த முந்திரி
அனகார்டியேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த முந்திரி,தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது.தென் அமெரிக்க முந்திரிகள் அனகார்டியா என்ற இனத்தையும் , ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட முந்திரிகள் ஃபெஜி மான்ரா என்ற இனத்தையும் சேர்ந்தது.
தென் அமெரிக்காக் கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து இருந்த பின்னர், தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்ததாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதன் அடிப்படையில் இந்தக் கண்டங்கள் பிரிந்த பொழுது முந்திரித் தாவரமும் தனித் தனியாகப் பிரிந்து, இரண்டு இன வகைகளாகப் பரிணமித்து விட்டதாக நம்பப் பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது ஐரோப்பாக் கண்டத்தில் ஜெர்மன் நாட்டில் உள்ள மெஸ்செல் ஏரிப் பகுதியில், நான்கு கோடியே எழுபது லட்சம் ஆண்டுகள் தொண்மையான முந்திரியின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அந்தப் புதை படிவத் தாவரத்தை புளோரிடா தேசிய அருங் காட்சியகத்தைச் சேர்ந்த தொல் தாவரவியல் வல்லுநர் டாக்டர். ஸ்டீவன் ஆர் மான்செஸ்டர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அபொழுது அந்தப் புதை படிவத் தாவரமனது,தென் அமெரிக்கா வகையைப் போல் இருந்தாலும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க வகையின் பொதுப் பண்புகளுடன் இருந்தது.
அதன் அடிப்படையில்,தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களில் காணப் படும் முந்திரி வகைகள், ஐரோப்பாவில் இருந்து முந்திரிகள் ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு பரவிய பிறகு பரிணமித்து இருப்பதாகத் தாவரவியல் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும், ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் முந்திரித் தாவரமனது, ஐரோப்பாக் கண்டத்தின் வழியாகப் பரவி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன் வட அமெரிக்கக் கண்டதுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில், அட்லாண்டிக் கடல் பகுதியில், இருந்த ஒரு நிலத் தொடர்பு வழியாகவே, முந்திரிகள், வட அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் முந்திரித் தாவரமனது பனியால் பாதிக்கப் படக் கூடியதால்,கால நிலை மாற்றத்தால், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதியில் முந்திரிகள் அழிந்து விட்டதாகவும்,ஆனால் பூமத்திய ரேகைப் பகுதியில் தழைத்து விட்டதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்தக் கண்டு பிடிப்பு மூலம், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதுடன், வட அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் நிலத் தொடர்பு இருந்து இருப்பதுடன்,அந்தக் காலத்தில் வட கோளப் பகுதியில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் வெப்ப நிலையும் குறைந்து பனி உருவாகி இருக்கிறது.
Comments