கடல் பசுக்கள் எப்படிக் கடல் கடந்தது ?
கடல் பசு என்று அழைக்கப் படும் விலங்கினம்,கண்டங்கள் மற்றும் தீவுகளை ஒட்டி இருக்கும் ஆழமற்ற கடல் பகுதியில் வசிக்கின்றன.பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த விலங்கு ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தரையில் வாழ்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது.
தரையில் நிலவிய போட்டியைத் தவிர்க்க ஆறு குளம் மற்றும் ஏ ரி க்கு அடியில் வளர்ந்து இருக்கும் தாவரங்களை உண்ணத் தொடங்கியது.பின்னர் தண்ணீரிலேயே அதிக நேரம் வசிக்க ஆரம்பித்தது.அதனால் கால்களை நடப்பதற்கு பயன் படுத்துவதற்கு பதிலாக,நீருக்கு அடியில் உள்ள தரையில் ஊன்றி உந்தி உந்தி நீந்தவும்,தண்ணீருக்கு அடியில் இருந்து எம்பி மேற்பகுதிக்கு வந்து காற்றை சுவாசிக்கவும் பயன் படுத்தியதில் காலப் போக்கில் கால்களை இழந்து துடுப்புகளைப் பெற்றது.
தண்ணீருக்கு அடியில் வாழும் பொழுது இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணீரின் மேற்பரப்புக்கு வந்து மூக்கை திறந்து காற்றை சுவாசிக்கும்.அதிக பட்சம் பதினைந்து நிமிடம் வரைக்கும் மூச்சை அடக்கி தண்ணீருக்கு அடியில் இருக்கும் தாவரங்களை உண்ணும்.
காலப் போக்கில் ஆறும் கடலும் சந்திக்கும் முகத் துவாரப் பகுதியில் அதிக உப்புத் தன்மை கொண்ட நீரிலும் வசிக்க ஆரம்பித்த பிறகு பின்னர் கடல் நீரிலும் வசிக்க ஆரம்பித்தது.ஆனாலும் கடற் பசுக்கள் நல்ல நீரையே குடிக்கும்.சாதாரணமாக ஏழு அடி ஆழத்தில் வசிக்கும்.அரிதாக இருபது அடி ஆழத்திலும் கடற் பசுக்கள் காணப் படும்.
இந்த விலங்கின் உடற் செயலில் மந்தமாக நடை பெறுவதால் முதுவாகவே இயங்கும்.ஆனாலும் மணிக்கு ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும்.
இருபது சென்டி கிரேட் வெப்ப நிலையில் வசிக்கும் கடற் பசுக்கள் அதற்கும் கீழே வெப்ப நிலை குறைந்தால் வெப்பமான பகுதிக்கு இடம் பெயர்ந்து விடும்.
தற்பொழுது கடற் பசுக்கள் வெப்ப மண்டலப் பகுதியான பூமத்திய ரேகைப் பகுதியிலேயே வசிக்கின்றன.
கடற் பசுக்களில் தற்பொழுது இரண்டு வகைகள் உள்ளன.இந்தியப் பெருங் கடல் மற்றும் பசிபிக் பெருங் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் டூகாங் என்று அழைக்கப் படுகின்றன.இதன் துடுப்பு போன்ற வால் பகுதியானது திமிங்கிலம் மற்றும் டால்பின்னுக்கு இருப்பதைப் போன்று பிளவு பட்டு இருக்கும்.
மானட்டி என்று அழைக்கப் படும் கடற் பசுக்கள் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் காணப் படுகின்றன. துடுப்பு போன்ற இதன் வால் பகுதியானது பிளவு படாமல் முறம் போன்று வளைந்து இருக்கும்.
டூகாங் வகைக் கடற் பசுக்கள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஸ்டெல்லார் என்று அழைக்கப் படும் டூகாங் வகையைச் சேர்ந்த கடற் பசுக்கள், பசிபிக் பெருங் கடலின் வட பகுதியில் வாழ்ந்து இருக்கின்றன.தற்பொழுது அந்த இனம் அழிந்து விட்டது.
அதே போன்று ஹாலி தீரியம் என்று அழைக்கப் படும் டூகாங் வகைக கடற் பசுக்களின் மூதாதைக ளின் புதை படிவங்கள்,ஐரோப்பாக் கண்டத்தில் பரவலாகக் காணப் படுகின்றன.
உதாரணமாக பெல்ஜியம்,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஹாலி தீரியம் வகைக கடற் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அதே போன்று டூகாங் வகையின் மூதாதை எனக் கருதப் படும் மெட்டாக்சி தீரியம் என்று அழைக்கப் படும் அழிந்து போன இனத்தைச் சேர்ந்த கடற் பசுக்களின் புதை படிவங்கள், அட்லாண்டிக் கடல் பகுதியிலும் தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜென்டைனா பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடல் பகுதியில் காணப் படும் மானட்டி என்று அழைக்கப் படும் கடற் பசுக்கள் ட்ரைகேகிடே என்ற இனத்தைச் சேர்ந்தது.இதில் தற்பொழுது மூன்று இன வகைகள் உள்ளன.
கரீபியன் தீவுப் பகுதியில் காணப் படும் மேற்கு இந்தியக் கடற் பசுக்களும் ,மத்திய அமெரிக்கப் பகுதியில் காணப் படும் ஆண்டிலியன் கடற் பசுக்களும் , ட்ரைகேகஸ் மானட்டஸ் மானட்டஸ் என்ற இன வகையைச் சேர்ந்தது.
புளோரிடா பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் ட்ரைகேகஸ் லாட்டிராஸ்ட்ரிஸ் என்ற இன வகையைச் சேர்ந்தது.அமேசான் ஆற்றுப் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் மானட்டி இனுங்குயிஸ் என்று அழைக்க படுகிறது.
ட்ரைகேகஸ் செனகலிஸ் என்று அழைக்கப் படும் மூன்றாவது இனம் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் பகுதியில் ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியுள்ள கடற் பகுதியில் காணப் படுகின்றன.
கடற் பசுக்கள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தரையில் வாழ்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியில் தோன்றிய விலங்கினம்.
கடற் பசுவும், யானை, நீர் யானை,மற்றும் ஹைராக்ஸ் என்று அழைக்கப் படும் கொறித்துண்ணி ஆகிய விலகினங்களும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த ஒரு பொது மூததையில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது.
இதன் அடிப்படையில் கடற் பசுக்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று விலங்கியல் வல்லுனர்கள் கருதினார்கள்.
ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட இரண்டு கோடி ஆண்டுகள் தொன்மையான கடற் பசுக்களுக்கு, சிறிய அளவிலான தொடை எலும்புகளுடன் இருந்தன.
கடற் பசுக்களின் மூததையானது தரையில் நடந்த விலங்கு என்பதால், தரையில் நடக்கக் கூடிய அளவுக்கு நான்கு கால்களும் உடைய தொன்மையான புதை படிவங்கள் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதியில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப் பட்டது.
ஆனால் 1855 ஆம் ஆண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில், கடற் பசுக்களின் மூததையின் தலைப் பகுதியை,ரிச்சர்ட் ஓவன் என்ற விலங்கியலாளர் கண்டு பிடித்தார்.
இதே போன்று ,2001 ஆம் ஆண்டு,வாசிங்டன் ஹோவர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் , டாக்டர் டாரில் டொம்னிங்,ஜமைக்கா தீவில் நான்கு கோடியே எண்பது லட்சம் தொன்மையுள்ள, கடற் பசுவின் மூதாதையின் புதை படிவத்தைக் கண்டு பிடித்தார்.
அந்த விலங்கானது தரையில் நடப்பதற்கு ஏற்ற படி நான்கு கால்களுடன் இருந்தது.அதன் அடிப்படையில் அந்த விலங்கானது நீர் யானையைப் போன்று, நீரிலும் நிலத்திலும் வாழும் வாழ்க்கையை மேற்கொண்டு இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஜமைக்காவில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவ விலங்கானது ,கடற் பசுவின் மூததையான நடக்கும் விலங்குக்கும் தற்பொழுது உள்ள நீர் வாழ் கடற் பசுவுக்கும் இடைப் பட்ட இனம் என்று தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் டாக்டர் டாரில் டொம்னிங், கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியில் குறிப்பாக தென் அமெரிக்கப் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதியை நோக்கி பயணம் செய்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று 2005 ஆம் ஆண்டு ,விளக்கம் தெரிவித்து இருந்தார்.
அத்துடன் தென் அமெரிக்கக் கண்டத்தில் பாயும் அமேசான் ஆறானது அட்லாண்டிக் கடலில் பாய்ந்ததாகவும், அதனால் அந்த நீரோட்டத்துடன் கடற் பசுக்களும் நல்ல நீரைக் குடித்த படி,ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்ததாகவும் விளக்கம் தெரிவித்து இருந்தார்.
மூததையான கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலுக்கு கிழக்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்று எதிர் பார்க்கப் பட்ட நிலையில், நடக்கக் கூடிய கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது தொல் விலங்கியல் வல்லுனர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
எனவே கடற் பசுக்கள் எங்கே பரிணாம வளர்ச்சி அடைந்து, எப்படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் பரவியது ? என்ற கேள்வி எழுந்தது.
தற்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் கண்டங்கள் பிரிந்து எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும் அதனால் கண்டங்களுக்கு இடையில் அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இதன் அடிப்படையில் கண்டங்கள் பிரிந்து எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்த பொழுது கடற் பசுக்களும் இரண்டு பிரிவாகப் பிரிந்து விட்டதாக நம்பப் பட்டது.
தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததால் அட்லாண்டிக் பெருங் கடல் உருவானது என்று நம்புகிறார்கள்.
இந்த நிலையில் கடற் பசுக்கள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் 1932 ஆம் ஆண்டு, ஜார்ஜ் கேய்லார்ட் சிம்சன் என்ற ஆராய்ச்சியாளர் மானட்டி இனக் கடற் பசுக்கள், அட்லாண்டிக் கடலின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு திசையை நோக்கி இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று விளக்கம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் மெதுவாக இயங்கக் கூடிய, காற்றை சுவாசித்து வாழக் கூடிய,எட்டு மணி நேரம் உணவை உண்டு வாழக் கூடிய கடற் பசுக்களால்,உன்ன உணவின்றி பல நாட்கள் தொடர்ச்சியாக அட்லாண்டிக் கடலை நீந்திக் கடக்க இயலாது .
இந்த நிலையில்,2008 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ,டாக்டர் ஜுலியன் பினாய்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுநர்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள டுனிசியாவில் உள்ள சாம்பி தேசியப் பூங்காப் பகுதியில் ,ஒரு விலங்கின் முதுகெலும்பு மற்றும் காதுப் பகுதியில் இருக்கும் எலும்புப் பகுதியையும் கண்டு பிடித்தார்.
கடற் பசுவின் காதுப் பகுதி எலும்பில் காணப் படும் தனித் தன்மைகளின் அடிப்படையில் அந்த எலும்பானது, ஒரு கடற் பசுவின் புதை படிவம் என்றும்,அந்த எலும்பானது இது வரை கண்டு பிடிக்கப் பட்டதிலேயே மிகவும் தொன்மையான அமைப்புடன் இருப்பதாகவும் டாக்டர் ஜுலியட் பினாய்ட் தெரிவித்து இருக்கிறார்.
அந்த எலும்புப் புதை படிவமானது நான்கு கோடியே எண்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையானது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும்,கடற் பசுக்களின் மூதாதைகள் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே தற்பொழுது கடற் பசுவினம் எந்தத் திசையில் பயணம் செய்து அட்லாண்டிக் கடலைக் கடந்தது ? என்ற கேள்வி எழுகிறது.
Comments