டைனோசர்களை அழித்த திடீர் கால நிலை மாற்றம்.பகுதி இரண்டு

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததைப் போலவே, 13,000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஏற்பட்ட கால நிலை மாற்றம் காராணமாக, மாஸ்டோடோண்ட் யானைகள் உள்பட ஸ்லோத் என்று அழைக்கப் படும் கரடி போன்ற விலங்கினங்களும் அழிந்திருப்பது ,தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனால் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று கால நிலை மாற்றம் ஏன் ஏற்பட்டது? என்பது குறித்துப் புவியியல் வல்லுனர்களுக்கு இடையே கருத்து வேறு பாடு நிலவுகிறது.
ஏனென்றால் தற்பொழுது துருவப் பகுதிகளில் காணப் படும் பனிப் படலங்களானது முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.பனிப் படலங்கள் உருவானதற்கு சூரியனைச் சுற்றி வரும் பூமியின் நீள் வட்டப் பாதையானது சிறிது பெரிதானதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.


பூமியின் வட்டப் பாதை பெரிதானதால் பூமிக்கு வந்த சூரிய ஒளியின் தாக்கம் குறைந்ததாகவும்,அதனால் பூமியில் வெப்ப நிலை குறைந்ததல் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவானதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு உருவான துருவப் பனிப் படலங்களானது மறுபடியும் உருகி விடுவதாகவும் நம்பப் படுகிறது.அதற்கு பூமியின் வட்டப் பாதையானது மறுபடியும் சிறிதாகுவதே காரணம் என்று நம்பப் படுகிறது.
இவ்வாறு துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி மறைவது, லட்சக் கணக்கான ஆண்டு கால இடைவெளியில் நடை பெறுவதாக நம்பப் படுகிறது.
பனிப் படலங்கள் உருவாகும் காலமானது பனியுகம் என்று அழைக்கப் படுகிறது.இது போன்று பூமியில் நாலைந்து முறை பனி யுகம் ஏற்பட்டதாக நம்பப் படுகிறது.
பனியுகத்தின் பொழுது, துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவான பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து கண்டங்களின் மேல் பரவிய பிறகு மறுபடியும் சிறிதாகுவதாக நம்பப் படுகிறது.பின்னர் மறுபடியும் வளரத் தொடங்குவதாக நம்பப் படுகிறது.இது போன்று பல்லாயிரம் ஆண்டு கால இடைவெளியில் பனிப் படலங்கள் பெரிதாகி சிறிதாகுவதாக நம்பப் படுகிறது.
இதற்கு பூமியின் அச்சுச் சாய்வில் ஏற்படும் மாற்றம் காரணம் என்று நம்பப் படுகிறது.
இதே போன்று ஒரு பம்பரம் சுழலும் பொழுது தலைய அசைத்து சுழலுவதைப் போன்று பூமியும் தலையை அசைத்து சுழல்வதாகவும் நம்பப் படுகிறது.
இது போன்று பூமியின் வட்டப் பாதை மற்றும் அச்சுச் சாய்வு மற்றும் தலையசைப்பின் விளைவாக பல்லாயிரம் ஆண்டு கால இடைவெளியில் பனிப் படலங்கள் வளர்ந்து தேய்வதாகவும் நம்பப் படுகிறது.

கடைசியாக முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பனிப் படலங்கள் உருவான பிறகு வளரத் தொடங்கியதாகவும்,அதன் தொடர்ச்சியாக பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்கள் பெரும அளவை எட்டியதாகவும்,அதன் பிறகு பனிப் படலங்களானது வெப்ப நிலை உயர்வால் சிறிதாகத் தொடங்கியதாகவும் நம்பப் பட்டது.

இந்தக் காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தின் வட பகுதியில் குறிப்பாக டென்மார்க் நாட்டில் உள்ள போலிங் ஏரி மற்றும் அல்லியார்ட் களி மண் பிரதேசத்தில் பிரச் ஆர்க்டிக் வில்லா போன்ற மரங்களுடன் அதிக வெப்ப நிலை நிலவியிருப்பது தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் இந்தக் கால கட்டம் போலிங் அல்லியர்ட் வெப்ப உச்ச காலம் என்று அழைக்கப் படுகிறது.


இந்த நிலையில் ஐரோப்பாவின் வட பகுதியில் ஆல்ப்ஸ் போன்ற பனிமலைப் பகுதியில் காணப் படும் ட்ரையாஸ் ஆக்டோ பெட்டாலா என்று அழைக்கப் படும் ரோஜாக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்களின் மகரந்தது துகள்கள் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படிவுகளில் ஏராளமாக இருப்பது தெரிய வந்தது.
இந்தப் பூவானது பனிப் படலங்களுக்கு அருகில் வளரக் கூடியது.


இதன் அடிப்படையில் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு ,ஐரோப்பாவின் வட பகுதியில் பனிப் படலங்களுடன் கடுங் குளிர் நிலவி இருப்பது தெரிய வந்துள்ளது.இந்த திடீர் கால நிலை மாற்றமானது யங்கர் ட்ரையாஸ் என்று அழைக்கப் படுகிறது.
இதே போன்று 14,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படிவுகளிலும் ட்ரையாஸ் ஆக்டோ பெட்டாலா பூக்களின் மகரந்தத் துகள்கள் காணப் படுவதால் அந்தக் கால கட்டமானது ஒல்டர் ட்ரையாஸ் என்று அழைக்கப் படுகிறது.
இதே போன்று 15,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படிவுகளிலும் ட்ரையாஸ் ஆக்டோ பெட்டாலா பூக்களின் மகரந்தத் துகள்கள் காணப் படுவதால் அந்தக் கால கட்டமானது ஒல்டஸ்ட் ட்ரையாஸ் என்று அழைக்கப் படுகிறது.
பூமியின் வட்டப் பாதை, அச்சுச் சாய்வு மற்றும் தலையசைப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களானது பல லட்சம் முதல் பல்லாயிரம் ஆண்டு கால சுழற்சியில் ஏற்படுவதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் ஆயிரம் ஆண்டு இடைவெளியில் வட கோளப் பகுதியில் பனிப் படலங்கள் உருவாகிக் கால நிலை மாற்றம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்திருப்பதால் ,அதற்கான காரணம் குறித்துப் புவியியல் வல்லுனர்கள் பல்வேறு விளக்கங்களை முன் வைத்திருக்கின்றனர்.
மேலும் இதே கால கட்டத்தில் பனி யானைகள் மற்றும் பனி காண்டா மிருகங்கள் போன்ற விலங்கினங்களும் அழிந்திருப்பதால் மறுபடியும் இதே போன்ற பேரழிவு ஏற்படுமா? எப்பொழுது ஏற்படும்?என அச்சமும் ஏற்பட்டுள்ளது.




பெரும்பாலான புவியியல் வல்லுனர்கள் 1989 ஆம் ஆண்டு வாலி புரோக்கர் என்ற புவியியல் வல்லுநர் முன்மொழிந்த ஒரு கருத்தையே நம்புகின்றனர்.அந்த விளக்கத்தின் படி வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் இருந்த பனிப் படலங்களானது திடீரென்று உடைந்து வட அட்லாண்டிக் கடலில் மிதந்து வந்திருக்கலாம் என்றும், அப்பொழுது அந்தப் பனிப் பாறைகளானது உருகியதன் காரணமாக உருவான உப்புத் தன்மையற்ற எடை குறைவான நீரானது கடலின் மேற்பரப்பில் மிதந்து இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.
அவ்வாறு மிதந்த உப்புத் தன்மையற்ற நீரானது தென் பகுதியில் இருந்து வட பகுதியை நோக்கி வந்த வெப்பக் கடல் நீரோட்டத்தை தடுத்திருக்கலாம் என்றும், அதனால் வட கோளப் பகுதியில் வெப்ப நிலையானது திடீரென்று குறைந்து பனிப் படலங்கள் உருவாகி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.

http://www.sci-news.com/geology/science-younger-dryas-climate-shift-asteroid-comet-quebec-01351.html

பனிப் படலம் உடைந்ததற்கு விண் கல் மோதி இருக்கலாம் என்று டார்மவுத் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் முகுல் சர்மா ஒரு விளக்கத்தை முன்வைத்திருக்கிறார்.
குறிப்பாக அவர் வட அமெரிக்காவில் ,பென்சில் வேனியா,மற்றும் நியூ ஜெர்சி பகுதிகளில் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில், அதீத வெப்பத்தால் உருவாகும் பாறைத் துணுக்கு மணிகள் இருப்பதைக் காட்டுகின்றனர்.
அந்தப் பாறைத் துணுக்கு மணிகளானது விண் கல் மோதலால் ஏற்பட்ட அதீத வெப்பத்தில் உருவானது என்று விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் அந்த விண் கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தைக் கண்டு பிடிக்கப் படவில்லை. இதற்கு அந்த விண் கல்லானது பனிப் படலத்தின் மேலே விழுந்ததால் பள்ளம் உருவாக வில்லை என்றும்,அல்லது அந்த விண் கல்லானது வானிலேயே வெடித்துச் சிதறி இருக்கலாம் என்று டாக்டர் முகுல் சர்மா கூறுகிறார்.

ஆனால் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் கால நிலை இயல் வல்லுநர் ஆண்ட்ரஸ் கார்ல்சன், உருகிய பாறைத் துணுக்குகளானது யங்கர் ட்ரையாஸ் போன்ற பனிக் காலத்தில் மட்டுமின்றி வேறு காலங்களிலும் உருவாகி இருகின்றன என்று கூறி, முகுல் சர்மாவிண் விளக்கத்தை ஏற்க மறுக் கிறார்.


யங்கர் ட்ரையாஸ் நிகழ்வு ஹெய்ன்ரிச் நிகழ்வு என்றும் அழைக்கப் படுகிறது.

அடுத்த பதிவில் தொடர்கிறது....
Comments