நன்னீர் வாழ் விலங்கினங்கள் எவ்வாறு மற்ற கண்டங்களுக்குப் பரவின?
டெவோனியன் காலம் என்று அழைக்கப் படுகிறது. இந்தக் காலத்தில் கடலிலும் நன்னீர் நிலைகளிலும் பல்வேறு வகையான மீனினங்கள் வாழ்ந்தன.எனவே இந்தக் காலம் என்றும் மீன்களின் காலம் என்று அழைக்கப் படுகிறது.
டெவோனியன் காலத்தில் வட அமெரிக்கக் கண்டமும் ஐரோப்பாக் கண்டமும் கிரீன்லாந்து தீவும் ஒன்றாக இணைந்து பூமத்திய ரேகைப் பகுதியில் யூரோஅமெரிக்கா என்ற ஒரு பெருங் கண்டம் இருந்ததாக நம்பப் படுகிறது.
குறிப்பாக முப்பத்தி எட்டு முதல் முப்பத்தி ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பலவகை கதுப்புத் துடுப்பு மீன்கள் தோன்றின.
கதுப்புத் துடுப்பு மீன்களின் புதை படிவங்கள் பெரும்பாலும் வட அமெரிக்கா கிரீன்லாந்து மற்றும் ஐரோப்பாவில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டது.
முக்கியமாக டெவோனியன் காலத்தில் சீனாவானது இரண்டு தீவுகளாக இருந்ததாகவும் நம்பப் பட்டது. அத்துடன் ஆஸ்திரேலியாக் கண்டமானது மற்ற தென் பகுதிக் கண்டங்களுடன் இணைந்து கோண்டுவானா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங் கண்டத்தின் பகுதியாக இருந்தது என்றும் நம்பப் பட்டது.
அத்துடன் முப்பத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கோண்டுவானாக் கண்டமானது யூரோ அமெரிக்காக் கண்டத்திற்கு தென் பகுதியில் அதாவது தென் துருவப் பகுதியில் இருந்ததாகவும் அதனால் கோண்டுவானாக் கண்டத்தின் மத்தியப் பகுதியானது பனியால் மூடப் பட்டு இருந்ததாகவும் நம்பப் பட்டது.
மேலும் கதுப்புத் துடுப்புக் காலிகளின் புதை படிவங்கள் வட அமெரிக்காவிலும் கிரீன்லாந்து தீவிலும் ஐரோப்பாவிலும் மட்டுமே கண்டு பிடிக்கப் பட்டதால் கதுப்புத் துடுப்பு மீன்கள் யூரோ அமெரிக்கக் கண்டத்தில் தோன்றியதாக நம்பப் பட்டது.
இந்த நிலையில் திடீரென்று சீனாவில் சைனோ ஸ்டீகஸ் என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு கதுப்புத் துடுப்பு மீனின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது அறிவியல் உலகம் ஆச்சரியம் அடைந்தது.
ஏனென்றால் டெவோனியன் காலத்தில் சீனாவானது இரண்டு தனித் தனி தீவுகளாக இருந்ததாக நம்பப் பட்டது.
அதற்கு முன்பு மெட்டாக்சி நேதஸ் என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு கதுப்புத் துடுப்பு மீனின் புதை படிவமானது ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப் பட்ட பொழுது உண்மையில் அந்தப் புதை படிவமானது கதுப்புத் துடுப்பு விலங்கினத்தைச் சேர்ந்ததா என்று மறு ஆய்வு செய்யப் பட்டது.
ஏனென்றால் டெவோனியன் காலத்தில் ஆஸ்திரேலியாக் கண்டமானது கோண்டுவானா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு தனிக் கண்டத்தின் பகுதியாக இருந்தது.
இது வரை கண்டு பிடிக்கப் பட்ட ஒன்பது வகை நாற்காலிகளின் புதை படிவங்கள் எல்லாம் வட அமெரிக்காவிலும் கிரீன்லாந்து தீவிலும் ஐரோப்பாவிலும் மட்டுமே கண்டு பிடிக்கப் பட்டது.
இந்த நிலையில் யூரோ அமெரிக்காக் கண்டத்தில் இருந்து பனியால் பிரிக்கப் பட்டு இருந்த ஆஸ்திரேலியாக் கண்டத்தில் ஒரு ஆதி கால நாற்காலி எப்படி சென்று இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
உடன் அது தற்செயலாக கடல் வழியாக எப்படியோ சென்று இருக்கலாம் என்று கருதப் பட்டது.
இந்த நிலையில் பூமத்திய ரேகைக்கு வடக்கில் தீவுப் பகுதியாக இருந்ததாக நம்பப் பட்ட சீனாவில் இருந்தும் ஆதி நாற்காலிகளின் புதை படிவம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது மறுபடியும் அதே கேள்வியை எழுப்பியது.
குறிப்பாக ஆஸ்திரேலியாவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆதி நாற்காலியின் எலும்புப் புதை படிவமானது கிரீன்லாந்து தீவில் கண்டு பிடிக்கப் பட்ட இக்தியோ ஸ்டீகா வகையை ஒத்து இருந்தது.
ஆனால் சீனாவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆதி கால நாற்காலியின் எலும்புப் புதை படிவமானது ஆஸ்திரேலியாவில் கண்டு பிடிக்கப் பட்ட மெட்டாக்சி நேதஸ் எலும்புப் புதை படிவத்தைப் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால் அவ்வாறில்லாமல் சீனாவின் கண்டு பிடிக்கப் பட்ட சைனோ ஸ்டீகஸ் ஆதி கால நாற்காலியின் எலும்புப் புதை படிவமானது கிரீன்லாந்து தீவில் கண்டு பிடிக்கப் பட்ட அகாந்தோ ஸ்டீகாவின் எலும்புப் புதை படிவங்களை ஒத்து இருந்தது.
இதற்கு முன்பு 1984 ஆம் ஆண்டு ரஷ்யாவில் துலா பகுதியில் குறிப்பாக ஐரோப்பாவின் மத்திய பகுதியிலும் துலர்பெட்டான் என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு ஆதி கால நாற்காலியின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
அப்பொழுது அந்தப் பகுதியில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் இருந்ததன் அடிப்படையில் அந்தப் பகுதியானது டெவோனியன் காலத்தில் கடல் முகத் துவாரமாக இருந்திருக்கலாம் என்று கருதப் பட்டது.
அதனால் கதுப்புத் துடுப்பு மீன்களானது கடல் வழியாக இடம் பெயர்ந்ததைப் போன்றே ஆதி கால நாற்காலிகளும் கடல் வழியாக இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
ஆனால் துலர்பெட்டானைத் தவிர மற்ற எல்லா ஆதி கால நாற்காலிகளின் புதை படிவங்கள் நன்னீர் பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது கதுப்புத் துடுப்பு மீன்கள் ஏன் நீரை விட்டு நிலத்திற்கு வர வேண்டும்/ என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு வறண்ட காலத்தில் குளம் குட்டை போன்ற நன்னீர் நிலைகளில் வெப்பத்தின் காரணமாக நீரில் பிராண வாயு குறைந்தது காரணமாக இருக்கலாம்,என்றும் அதே போன்று அடிக்கடி நீர் வற்றுவதும உணவுக்கு ஏற்பட்ட போட்டி போன்று பல காரணங்கள் கூறப் பட்டன.
நன்னீர் நிலைகளில் பல சமயங்களில் பாசிகள் அதிக அளவில் வளர்ந்து பிராணவாயு பற்றாக் குறையை ஏற்ப்டுத்துகின்றன.
பிராண வாயுப் குறைவும் ,உணவுப் பற்றாக் குறையும் நன்னீர் நிலைகளிலேயே அதிகாமாக ஏற்படும்.
ஆனால் குளம் குட்டை போன்ற நன்னீர் நிலைகளைப் போல் அல்லாது கடலானது அதிகம் நிலையானது என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே கடலை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் மிகவும் குறைவு.
முக்கியமாக ஆதி கால நாற்காலிகளின் கால்களானது ஆழமற்ற நீர் நிலையில் வாழ்வதற்கு ஏற்றதாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
முக்கியமாக தவளைகளானது குளம் குட்டை போன்ற நன்னீர் நிலைகளின் அருகிலேயே வாழ்வதும் குறிப்பிடத் தக்கது.
எனவே ஆதி கால மீன் தவளைகள் குளம் குட்டை போன்ற நன்னீர் நிலைகளில் தோன்றி மற்ற கண்டங்களுக்கு தரைவழித் தொடர்பு வழியாக குறிப்பாக ஆறுகள் மூலமாகவே இடம் பெயர்ந்து இருக்கிறது.
இதற்கு ஆதி கால நாற்காலிகளின் புதை படிவங்கள் காணப் படும் இடங்களே சான்று.எப்படியென்றால் ஆதி கால நாற்காலிகளின் புதை படிவங்கள் காணப் பட்ட வட அமெரிக்கா கிரீன்லாந்து ஐரோப்பா ரஷ்யா சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நிலப் பகுதிகளானது அடுத்தடுத்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
Comments