எரிமலைகள் உயர்ந்து தாழ்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.
எரிமலை வெடிப்பு மற்றும் நில அதிர்ச்சியின் பொழுது தரையில் ஏற்படும்
மாறுபாடுகளை குறிப்பாக ஏற்றத் தாழ்வுகளை துல்லியமாக அறிவதற்கு செயற்கைக் கோள் மூலம்
எடுக்கப் படும் ரேடியோ கதிர் வீச்சு படங்கள் பயன் படுகின்றன.
உதாரணமாக விழி இழந்தவர்கள் ஒருவர் நீண்ட குச்சியில் உதவியால் தரையைத் தட்டித் தட்டி
மேடு பள்ளங்களை அறிந்து கொள்கின்றனர்.அதே போன்று பூமியின் மேல் பறக்கும் செயற்கைக்
கோள்கள் தரையின் மேல் ரேடியோ கதிர்களை வீசும் பொழுது அந்தக் கதிர்கள் தரையின் மேல்
பட்டு எதிரொலிக்கும் பொழுது செயற்கைக் கோளில் உள்ள ஆண்ட்டனாக்கள் மூலம் சேகரிக்கப்
பட்டு தரையின் அமைப்பு பதிவு செய்யப் படுகிறது.
பின்னர் அந்தப் பதிவுகள் கணிப் பொறி மூலம் படங்களாக மாற்றப் படுகின்றன.இந்த
முறையில் ஒரு இடத்தில் நில அதிர்ச்சிக்கு முன்பு எடுத்த படங்களுடன் அதே இடத்தை நில
அதிர்ச்சிக்குப் பிறகு எடுக்கப் பட்ட படங்களுடன் பொருத்தி பார்க்கும் பொழுது நில
அதிர்ச்சியினால் தரை எந்த அளவிற்கு மாறு பட்டிருக்கிறது என்பது துல்லியமாக அறியப்
படுகிறது.
இந்த முறையில் எடுக்கப் பட்ட படங்களில் செயல் படாத எரிமலைகள் என்று கருதப்
பட்ட பல எரிமலைகள் உண்மையில் உயர்ந்துகொண்டும் தாழ்ந்து கொண்டும் இருப்பது தெரிய
வந்திருக்கிறது.இதனால் இந்த எரிமலைகள் மூச்சு விடும் எரிமலைகள் என்று வர்ணிக்கப்
படுகின்றன.முக்கியமாக இந்த எரிமலைகளின் குமுறலால் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு,
எரிமலையைச் சுற்றிலும் தரைப் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய வடிவில்
வரப்பு வெட்டியதைப் போன்று தரைப் பகுதி சில அங்குலம் மேல் நோக்கி உயர்ந்து
இருப்பதும் அதே போன்று எரிமலையைச் சுற்றிலும் தரைப் பகுதியில் பல கிலோ மீட்டர்
சுற்றளவிற்கு வளைய வடிவில் பள்ளமும் ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது.
இவ்வாறு எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டார் சுற்றளவிற்கு வளைய வடிவில்
பள்ளமும் மேடும் ஏற்படுவதற்கு எரிமலை மேல் நோக்கி உயர்ந்து பிறகு தாழ்வடைவதே காரணம்
ஆகும்.
குறிப்பாக எரிமலைக்கு உள்ளே பாறைக் குழம்பின் அளவு அதிகரிக்கும் பொழுது
எரிமலைகள் மேல் நோக்கி உயர்கின்றன.எனவே எரிமலையைச் சுற்றிலும் உள்ள நிலப் பகுதியும்
உயர்வடைகிறது.அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்களும் புகையும் நீராவியும்
வெளியேறும் பொழுது எரிமலை இறங்குகிறது.
இதனால் எரிமலையைச் சுற்றிலும் உள்ள நிலப் பகுதியையும் இறங்குகிறது.இது போன்று
பல முறை எரிமலை உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர்
சுற்றளவிற்கு பல மேட்டு வளையங்களும் அதே போன்று பள்ள வளையங்களும்
உருவாகின்றன.
முக்கியமாக எரிமலைகளைச் சுற்றிலும் மேட்டு வளையங்களும் பள்ள வளையங்களும்
ஏற்படுவதைப் போன்றே நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களிலும் நில அதிர்ச்சி ஏற்பட்ட மையப்
பகுதியைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரையில் மேட்டு வளையங்களும்
பள்ள வளையங்களும் ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கொள் மூலம் எடுக்கப் பட்ட படங்களில்
தெரிய வந்திருக்கிறது.
எனவே ஒரு இடத்தில நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு பூமிக்கு அடியில் இருக்கும்
எரிமலைகள் மேல் நோக்கி உயர்ந்து தாழ்வதே காரணம்.
Comments